மேலும்

இந்தியாவின் திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதாக சிறிலங்கா வாக்குறுதி

சிறிலங்காவில், இந்தியாவினால் நிதியிடப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர்  கிரண் ரிஜிஜுவைச் சந்தித்த, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சில் கடந்த டிசெம்பர் 27ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலர் தினேஸ் பட்நாயக் மற்றும் இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

சமயம், கலாசாரம், பொருளாதார செயற்பாடுகள், குறிப்பாக, யாத்திரைச் சுற்றுலா போன்ற துறைகளில் நெருங்கிய உறவுகளை இன்னும் வலுப்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ள இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர்  கிரண் ரிஜிஜு, இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் சாதகமான நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது மெதுவாக முன்னெடுக்கப்பட்டு வரும், இந்தியாவின் கடன் திட்டங்களின் கீழான திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதற்கு தனிப்பட்ட முறையில் தான் முயற்சிகளை எடுப்பதாக சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ உறுதியளித்துள்ளார்.

தற்போது சுமார் 1400 சிறிலங்கா படையினர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்த ஒஸ்ரின் பெர்னான்டோ, இந்த வாய்ப்பை அளித்த இந்திய அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *