மேலும்

கொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பல்வேறு நம்பகமான வழிகளின் ஊடாக சரிபார்த்துக் கொண்டதில், இந்த தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது.

அதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன்.

எனது பாதுகாப்பு அணி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டதாக கூறினேன். அதனைப் பார்த்துக் கொள்வதாக இணங்கிய போதிலும், அதற்குப் பின்னர் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இது நடந்து ஒன்றரை மாதங்களாகி விட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்றும், பாதாள உலகக் குழுத் தலைவரின்  இந்த முயற்சியை அறிந்து கொண்டு தாம் மேலதிக முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவையும், தன்னையும் கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய செய்திகள் வெளியானதும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பலர் தொலைபேசியில் அழைத்து,  மேலதிக பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும், உள்ளூர் பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தச் சதித் திட்டம் தொடர்பாக எங்கிருந்து தகவல் கிடைத்தது என்றோ, அதனை எவ்வாறு சரிபார்த்துக் கொண்டார் என்பதையோ கோத்தாபய ராஜபக்ச வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

அதேவேளை, தம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைகளை நடத்துமாறும், தமக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு, கோத்தாபய ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *