மேலும்

விலகிச் சென்ற 15 பேர் அணி மீது ‘போர் தொடுக்கும்’ சிறிலங்கா அதிபர்

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ‘போர்’ தொடுத்துள்ளார்.

அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியுடன் கைகோர்த்துள்ள முன்னாள் அமைச்சர்களான, அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, சந்திம வீரக்கொடி, ஆகியோர், தத்தமது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து சிறிலங்கா அதிபரால் நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, ரி.பி.எக்கநாயக்க, சந்திம வீரக்கொடி ஆகியோரை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்தே, அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, சந்திம வீரக்கொடி, ஆகியோரின், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், அண்மையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் நடத்தப்பட்ட ஜன பலய பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அதனைப் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கூட்டு அரசில் இருந்து விலகிச் சென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான, தயாசிறி ஜயசேகர, திடீரென சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்பியுள்ளார்.

நேற்றுமுன்தினம் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தயாசிறி ஜெயசேகர சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *