மேலும்

விக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம்

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஒத்திவைக்குமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவைச் செயற்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தரப்பில் முன்னிலையான சட்டவாளர், கனகஈஸ்வரன், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு ஒன்று  வரும் 28 ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது என்றும், அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்குமாறும் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

அதற்கு, டெனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான சட்டவாளர் சுரேன் பெர்னான்டோ, மேன்முறையீட்டு நீதிமன்றின் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும், எனவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவை நிராகரிப்பதாக அறிவித்துடன், விசாரணையை தொடர்ந்து நடத்துவதாகவும் அறிவித்தனர்.

இதையடுத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சட்டவாளர்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று, அடிப்படை எதிர்ப்பு மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை, எதிர்வரும் ஒக்ரோபர் 16ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதேவேளை, டெனீஸ்வரனை வடமாகாண அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சரின் நடவடிக்கைக்கு எதிராக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ஒக்ரோபர் 17ஆம் நாள் வரை நீடிப்பதாகவும் நீதியரசர்கள் அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *