மேலும்

விடியும் வரை நடத்தவிருந்த சத்தியாக்கிரகம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது

கொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகம் இன்று விடிகாலை வரை தொடரும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்த போதும், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.

நேற்று மாலை பேரணியில் பங்கேற்றவர்களின் மத்தியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது,

“இந்தப் பேரணி மிகவும் வெற்றியளித்துள்ளது. விடிகாலை வரை இந்தப் போராட்டம் தொடரும், பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெருந்தொகையானவர்கள் கொழும்பில் ஒன்று கூடினார்கள்.

தடைகள் ஏற்படுத்த ஏற்படுத்த கூட்டு எதிரணி பலமடையும், இதுபோன்ற போராட்டங்களை கூட்டு எதிரணி எதிர்காலத்திலும் நடத்தும்” என்று கூறியிருந்தார்.

எனினும், மகிந்த ராஜபக்சவுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மாலை 7 மணியுடன் குறையத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் 3000 பேர் வரையிலேயே அங்கு அமர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவுக்கு முன்னரே- சுமார் 11.30 மணியுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த கூட்டு எதிரணியின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் விடியும் வரை நடத்தவிருந்த போராட்டம், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *