மேலும்

ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு,  சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன், அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தியத் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் வரும் 12ஆம் நாள் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ளார்.

அவர் வரும் 11ஆம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார்.

மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் தங்கியிருக்கும் தருணத்திலேயே சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்றக் குழுவும் அங்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *