மேலும்

சிறப்பு அதிரடிப்படை மீது சரத் பொன்சேகா சரமாரி குற்றச்சாட்டு

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தமது ஆதரவாளர்கள் பலர் அண்மையில் சோடிக்கப்பட்ட மற்றும் பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு உரையாற்றிய அவர், 2016ஆம் ஆண்டு உறுகொடவத்தையில், கைப்பற்றப்பட்ட கொக்கைன் கொள்கலனுடன், லதீப்பின் மைத்துனருக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

வத்தளவில் பாதாள உலக பிரமுகர் மஞ்சு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

காவல்துறைக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அதிக சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. அதனை சில காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து. சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானால் அது பாரிய பிரச்சினையாக இருக்கும் என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா நிகழ்த்திய உரை சர்ச்சைக்குரியது என்று ஒப்புக் கொண்ட சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார, இதுகுறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஏற்கனவே கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சுதந்திரமான விசாரணைக்காக இந்த விடயம் அரச புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *