மேலும்

மாகாணசபை தொகுதி எல்லை வரையறை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிப்பு

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை மீது நேற்று முற்பகல் 11.30 தொடக்கம் மாலை 6 மணி வரை விவாதம் நடத்தப்பட்டது. அதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, 139 வாக்குகள்  அறிக்கைக்கு எதிராக அளிக்கப்பட்டன. எந்தவொரு உறுப்பினரும், இந்த அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், இந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

ஜேவிபி இந்த அறிக்கைக்கு ஆதரவாக கருத்து  வெளியிட்ட போதும், அதன் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 85 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சபையில் இருக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்களில், அமைச்சர்கள் பைசர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய மூன்று அமைச்சர்கள் மாத்திரம் அவையில் இருந்தனர். அவர்களும் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின்  போது, அமைச்சர் றிசாத் பதியுதீனும் அவையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *