மேலும்

ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்கத் தயாராகும் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்குவதற்குத் தேவையான பெருமளவு கண்ணீர்ப் புகைக் குண்டுகள், உயர் தொழில்நுட்ப தலைக்கவசங்கள், இறப்பர் குண்டாந்தடிகள் போன்றவற்றைக் கொள்வனவு செய்யவுள்ளது.

சிறிலங்காவில் அரசாங்கத்துக்கு எதிரான  தொழிற்சங்க மற்றும்  அரசியல் பின்புலத்திலான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், கண்ணீர் புகைக் குண்டுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த இறப்பர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியிருந்தன.

இதனை நிராகரித்துள்ள சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர், ‘போதுமானளவு கண்ணீர் புகைக்குண்டுகள் கையிருப்பில் இருப்பதாகவும், மேலும் 5000 கண்ணீர் புகைக்குண்டுகளைக் கொள்வனவு செய்வதற்கு கொள்வனவுக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களை அடக்கும் காவல்துறையினருக்காக 2000 உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு தலைக்கவசங்களையும் விநியோகிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது காவல்துறையின் பயன்பாட்டில் உள்ள மரத்தினாலான குண்டாந்தடிகளுக்குப் பதிலாக, 2000 இறப்பர் குண்டாந்தடிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஆர்ப்பாட்டங்களை அடுத்த மாதம்  தீவிரப்படுத்தப் போவதாக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி அறிவித்துள்ள நிலையில், சிறிலங்கா காவல்துறைக்கு பெருமளவிலான கலகம் அடக்கும் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *