மேலும்

சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, உலக அமைதிக்கு முக்கியம் – அமெரிக்க காங்கிரஸ் குழு

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு முக்கியமானது என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிக் குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை அமெரிக்க காங்கிரஸ் குழு சந்தித்துப் பேச்சு நடத்தியது.

அமெரிக்க காங்கிரசின், ஆயுதப்படை சேவைகள் குழுவின் தலைவரான மக் தோன்பெரி தலைமையிலான இந்தக் குழுவில்,  ஹென்றி கியூலன், விக்கி ஹார்ட்ஸ்லெர், கரோல் சி போர்ட்டர் ஆகியோர் இந்தக் குழுவில்  இடம்பெற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்துடன்,  சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி உதவிகள் அளிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

“அமெரிக்காவும், சிறிலங்காவும் இணைந்து, தொடர்ச்சியாக இராணுவப் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கு, கூடுதல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவது அவசியம். நவீன உலகில் தொழில்நுட்பமின்றி எந்தப் பாதுகாப்பும் இல்லை.

சிறிலங்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் அமெரிக்க படையினரின் ஒத்துழைப்பு முக்கியமானது.

எனவே இத்தகைய ஒத்துழைப்பு இரண்டு நாடுகளுக்கும் இடையில் முக்கியமானது” என்றும் சிறிலங்கா அதிபர் கூறினார்.

அதேவேளை,போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்த அமெரிக்க காங்கிரஸை குழு உறுப்பினர்கள், சிறிலங்காவை பலமான -செழிப்பான ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது தமது நாட்டின் கொள்கை என்றும் குறிப்பிட்டனர்.

அத்துடன், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு முக்கியமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ  ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறியும் நோக்கிலேயே தாம் சிறிலங்கா வந்துள்ளதாகவும்  அமெரிக்க காங்கிரஸ் குழுவினர்  கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *