மேலும்

சிறிலங்காவில் 18 அமைச்சர்கள் பதவியேற்பு – விஜேதாச உள்ளே, ரவி வெளியே

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, 18 அமைச்சர்கள் புதிய அல்லது மேலதிக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்கள் பதவிகளைப் பொறுப்பேற்றனர்.

இதில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதவி விலகிய விஜேதாச ராஜபக்சவுக்கு உயர்கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் உயர் கல்வி அமைச்சராக இருந்த கபீர் காசிம், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருந்த சரத் பொன்சேகாவுக்கு மேலதிகமாக, நிலையான அபிவிருத்தி மற்றும், வனவாழ் உயிரினங்கள் அமைச்சுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சராக இருந்த மகிந்த அமரவீர விவசாய அமைச்சராகவும், விவசாய அமைச்சராக இருந்த துமிந்த திசநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம் இருந்த சமூக வலுவூட்டல் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுக்கள், ஐதேகவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்ட போதும், இன்று அவருக்கு எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையே, பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை காலை பதவியேற்கவுள்ளனர்.

இன்று நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் துறைகளும்-

 • லக்ஸ்மன் கிரியெல்ல  – பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி
 • மகிந்த அமரவீர – விவசாயம்
 • எஸ்.பி.நாவின்ன – உள்நாட்டு விவகாரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி
 • சரத் அமுனுகம – விஞ்ஞான தொழில்நுட்பம், ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரியம்
 • துமிந்த திசநாயக்க –  நீர்ப்பாசன, நீர்வளங்கள் முகாமைத்துவம், மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
 • தலதா அத்துகோரள – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
 • பைசர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
 • ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும்
 • கபீர் காசிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
 • பி.ஹரிசன் – சமூக அபிவிருத்தி
 • மனோ கணேசன் – தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்
 • சாகல ரத்நாயக்க – செயற்றிட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி
 • டி.எம்.சுவாமிநாதன் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரம்
 • விஜித் விஜயமுனி சொய்சா -கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி
 • விஜேயதாச ராஜபக்ச – உயர்கல்வி மற்றும் கலாசாரம்
 • ரவீந்திர சமரவீர – தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விவகாரம்
 • சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனவாழ் உயிரினங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி
 • தயா கமகே – சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்ப கைத்தொழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *