மேலும்

ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு

ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்காக சிறிலங்கா நாடாளுமன்றம், அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டதுடன், 21 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, 2016 ஏப்ரல் 5ஆம் நாள் தொடக்கம், 2017 ஆம் நாள் நொவம்பர் 16ஆம் நாள் வரை 75  கூட்டங்களை நடத்தி, அரசியலமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது.

கடந்த ஆண்டு நொவம்பரில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதுடன், சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட உள் முரண்பாடுகளை அடுத்து, வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் முடங்கிப் போயின.

இந்த நிலையில், மே 8 ஆம் நாள் நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பின்னர் வழிநடத்தல் குழுவின் கூட்டத்தைக் கூட்டி, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மே 8ஆம் நாளுக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் கூட்டத்தைக் கூட்ட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், கூட்டம் நடைபெறும் சரியான நாள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், வழிநடத்தல் குழுவின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான நாளை முடிவு செய்யுமாறு சிறிலங்கா பிரதமர் கோருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *