மேலும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்?

சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆட்சி செய்த நிலையில் இவ்வாறானதொரு கலவரம் இடம்பெற்றதானது, இக்கலவரத்திற்கு மகிந்த அரசாங்கமே காரணம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் 2015ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

தற்போதைய சூழ்நிலையில், சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் அனுதாபம் மிக்கதொரு கட்சியாகவும் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் சிங்கள எதிர்ப்புக் கட்சியாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியே விளங்குகிறது.

இவ்வாறானதொரு ஆட்சியின் கீழ், மார்ச் 2018ல் கண்டி மாவட்டத்திலுள்ள திகணவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. இக்கலகத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டன.

இவ்வாறானதொரு இழிவான செயலுக்கு சிறுபான்மையினருடன் நட்புறவைப் பேணும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு அனுமதி வழங்கியது?

ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதே ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மையான செயற்பாடாகக் காணப்படுகிறது. ராஜபக்சவின் தீவிர தேசியவாத அரசியலே இவர் இலகுவாக இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணமாகும்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பெறுபேறானது ராஜபக்சவிற்கு சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியானது சிறுபான்மையினரின் ஆதரவை இழந்து விடக்கூடியது பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது. இத்தேர்தலில் ஐ.தே.க 33 சதவீத வாக்குகளையும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி 13 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இந்நிலையில் 2020ல் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இத்தேர்தலில் 50 சதவீத வாக்குப் பலத்தைப் பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்ச தலைமையிலான எதிர்கட்சி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளையே பெரும்பான்மையாகப் பெற்றிருந்தது.

2020ல் இடம்பெறவுள்ள தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிறுபான்மை மக்கள் மத்தியில் தான் நல்லவன் என்கின்ற எண்ணத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ராஜபக்சவிற்கு உள்ளது.

ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியிலிருக்கும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இவ்விரு அரசியல்வாதிகளையும் ஐ.தே.க கைது செய்ய விரும்பினால் எந்தவொரு சிக்கலுமின்றி அதனை நிறைவேற்ற முடியும்.

சிறிலங்கா அரசாங்கத்திடம் முழுமையான இராணுவ மற்றும் காவற்துறை அதிகாரங்கள் குவிந்துள்ள நிலையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற கலகத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும். ஆனால்  அதனை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கலகம் தொடர்பாக ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பாராமுகம் காண்பித்ததன் மூலம் எதனைச் சாதித்துள்ளது?

உள்ளூராட்சித் தேர்தலில் தாம் தோல்வியடைவோம் என்பதை ஐ.தே.க கட்சியைச் சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியும் நம்பவில்லை. மற்றைய பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ராஜபக்ச மற்றும் சிறிசேனவிற்கு இடையில் பிளவுபட்டுள்ளது. இக்கட்சிப் பிளவானது பிளவுபடாதா ஐ.தே.க விற்கு நலன் பயக்கும் என மிகச் சாதாரணமாக எடைபோடப்பட்டது.

இத்தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைந்ததன் பின்னர், இக்கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவமானது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு எதிரான உட்கட்சிப் பூசலாக தற்காலிகமாக முடிவுற்றது. தேர்தலின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை ரணில் விக்கிரமசிங்க தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். ஆகவே கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை முடிவிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டியது ரணில் விக்கிரமசிங்கவின் கடமையாகும்.

ரணில் விக்கிரமசிங்க இதனைச் செய்யத் தவறியமையின் மூலம் தான் ஒரு வினைத்திறனற்ற தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். இக்கலகமானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் கூட, விக்கிரமசிங்கவின் வினைத்திறனற்ற தலைமைத்துவமானது நாட்டின் ஆட்சி மீதான அவரது பிடியை பலவீனப்படுத்தியுள்ளது.

இதற்கும் மேலாக, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கமானது இவ்வன்முறைச் சம்பவம் தொடர்பில் ராஜபக்ச மீது பழிசுமத்துவதுடன் இதன் மூலம் தனக்கான பிரபலத்தை மேலும் அதிகரிப்பதற்கும் திட்டமிட்டது. ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, இவ்வன்முறைச் சம்பவத்தில் ராஜபக்ச தொடர்புபடவில்லை என்பதில் மக்கள் தெளிவாக இருந்தனர். பதிலாக, இவ்வன்முறைச் சம்பவத்திற்கு ஐ.தே.கவே காரணம் என ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர்.

எடுத்துக்காட்டாக, இக்கலகத்துடன் தொடர்புபட்ட சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பான மஹாசோன் பலகாயவின் தலைவர் கைதுசெய்யப்பட்ட போது, இவர் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் அவரது தீவிர பௌத்தவாத எண்ணக்கருவைச் செயற்படுத்துவதற்காகப் பணிபுரிந்தார் என தெரியவந்தது.

இறுதியில், இவ்வன்முறைச் சம்பவம் நிறைவு பெற்ற பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தால் ‘முகப்புத்தகம்;’ மற்றும் ஏனைய சமூக ஊடகங்களைப் பார்வையிடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தமது தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்கு இவ்வாறான சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவார்கள் எனக் காரணங் காட்டியே சமூக ஊடகங்கள் மீதான தடை விதிக்கப்பட்டது.

இது உண்மையாக இருந்தாலும் கூட, சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு இது மட்டும் காரணமல்ல. குறிப்பாக முகப்புத்தகமானது ராஜபக்சவைத் தோற்கடித்து தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றியிருந்தது. எனினும், பின்னர் சமூக ஊடகங்களில் தற்போதைய அரசாங்கம் தனக்கான பிரபலத்தை இழந்துள்ளது.

ஆகவே ஒரு வாரத்திற்கு சமூக ஊடகங்கள் மீதான தடை நீடிக்கப்பட்டாலும் கூட, இது ஐ.தே.க அரசாங்கத்திற்கு இது வசதியாகக் காணப்பட்டது. ஆனால் இத்தடைக்கு மக்கள் மத்தியிலிருந்தும் அனைத்துலக சமூகத்திடமிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியமையால் ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.

இக்கலவரமானது பெப்ரவரி மாதம் ஆரம்பமானது. இதில் ஐந்து பேர் ஈடுபட்டனர். இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஒரு வாரத்தின் பின்னர், இச்சம்பவமானது முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் எரியூட்டப்படுவதற்குக் காலாக அமைந்தது. இவ்வன்முறைச் சம்பவத்தை பொருத்தமான வகையில் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்தியிருக்க முடியும்.

ஆனால் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பாராமுகம் காண்பித்தது. இது ஐ.தே.க வின் உள்வீட்டுப் பிரச்சினை எனவும் இது தானாக தீர்க்கப்படும் எனவும் அரசாங்கம் நம்பியது.

அண்மையில் சிறிலங்காவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிசுமத்த விரும்பினால் அரசாங்கத்தையும் பிரதமரையுமே பழிசுமத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் – Samal Vimukthi Hemachandra
வழிமூலம்       – livemint
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *