மேலும்

தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்

நோர்வேயின் தமிழ்3 வானொலியின் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல்  22ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. இதில், மூத்த எழுத்தாளர் நிலக்கிளி அ. பாலமனோகரன்  மதிப்பளிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்3 வானொலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

மூத்த எழுத்தாளர் நிலக்கிளி அ. பாலமனோகரன்  அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிவரும் நீண்டகாலப் பங்களிப்பினை அடையாளப்படுத்தி தமிழ்3 வானொலி அவருக்கு இந்த ஆண்டின் சங்கமம் நிகழ்வில் சிறப்பு மதிப்பளிப்பினை வழங்கவுள்ளது.

பாலமனோகரன்  ஈழத்தின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களில் ஒருவர். முல்லைத்தீவின் தண்ணீரூற்று அவரது சொந்த இடம். புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் வாழ்ந்து வருபவர்.

1973இல் இலங்கையின் சாகித்ய மண்டல விருதினைப் பெற்றது அவரது முதலாவது நாவலான ‘நிலக்கிளி’.

தொடர்ச்சியாக பல நாவல்கள் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு மற்றும் ஓவியங்கள் ஆகிய படைப்பாக்க வகைமைக்கூடாகத் இலக்கியத்திற்குப் பங்களித்துவருபவர்.

நிலக்கிளி, கனவுகள் கலைந்த போது, வட்டம்பூ, குமாரபுரம், நந்தாவதி ஆகியன இவர் எழுதிய நாவல்கள். இவற்றில் நிலக்கிளி ‘The bleeding heart’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. 2010இல் இதன் அறிமுக நிகழ்வு ஒஸ்லோவிலும் இடம்பெற்றிருந்தது. கடந்த வாரம் நிலக்கிளி டெனிஸ் மொழியில் (Jordpapegøjen) வெளிவந்திருக்கின்றது.

தீபதோரணங்கள், நாவல்மரம் ஆகிய தலைப்புகளில் இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நாவல்மரம் சிறுகதைத் தொகுதி டெனிஸ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தவிர டெனிஸ் – தமிழ் அகராதிக்கு இவரது பங்களிப்பு இருந்துள்ளது.

கலாநிதி முருகர் குணசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல்களான ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு’ – கி.மு 300 – கி.பி.2000), ‘இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பதோற்றம் பற்றியதோர் ஆய்வு’ ஆகிய நூல்களைத் தமிழாக்கம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் சமூக பண்பாட்டு வாழ்வியலினதும், புலம்பெயர் வாழ்வியலினதும் பிரதிபலிப்பாக அமைந்த இவரது படைப்புகளும் எழுத்துகளும் தனித்துவமானவை.

அத்தகைய படைப்பாளியை 22.04.218 இடம்பெறவுள்ள தமிழ்3 இன் இந்த ஆண்டின் சங்கமம் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைப்பதிலும், தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், மேன்மைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பினை அடையாளப்படுத்தி மதிப்பளிப்பதிலும் தமிழ்3 பெருமையும் நிறைவும் அமைகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *