மேலும்

ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா

அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சீனா மற்றும் ரஸ்யா ஆகிய  இரு நாடுகளும் இணைந்து மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கான நிதி வழங்கலைத் தடுப்பதற்காக 5வது ஆணைக்குழு எனக் கூறப்படும் ஐ.நா சபையின் வரவு செலவுத் திட்டக் குழுவைப் பயன்படுத்தியுள்ளன.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் அதிகாரிக்கான நிதியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற மிக மோசமான படுகொலைகள் இடம்பெறாமல் தடுப்பதில் அல்லது இது தொடர்பாக சிறிலங்காவிற்கு ஐ.நா எச்சரிக்கை விடுக்கத் தவறியதைத் தொடர்ந்து 2014ல் ஐ.நா மனித உரிமைகள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.

மனித உரிமைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் உயர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் சீனா மற்றும் ரஸ்யாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து இவ்வாண்டு ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் பதவி நிலைக்கான நிதியை ஐ.நாவின் 5வது ஆணைக்குழு நிறுத்தியுள்ளது.

ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்திற்கான நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு தான் தனது பதவியிலிருந்து விலகப் போவதாகவும் தொடர்ந்தும் இதில் பதவி வகிக்க விரும்பவில்லை எனவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக சமூகத்தின் ஆதரவானது குறைவாக உள்ளதால், இது தனது பணியைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தடையாக உள்ளதாகவும் மனித உரிமைகளுக்கான தற்போதைய உயர் ஆணையாளர் செயிட் ராட் ஹூசேன் தனது பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிரியாவில் வாழும் பொதுமக்களின் அவலநிலை தொடர்பாக செயிட் உரையாற்றியிருந்தார். இவர் தனது உரையின் ஆரம்பத்தில், பாதுகாப்புச் சபையானது மனித உரிமைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குப் பொருத்தமான தளம் அல்ல என்பதால் இங்கு தான் உரையாற்றுவதைத் தடுப்பதற்காக ரஸ்யாவால் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக செயிட் தெரிவித்திருந்தார்.

‘ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது ஆணைக்குழுவானது மனித உரிமைகள் தொடர்பாக விவாதிப்பதற்கான ஒரு களமாக மாறியுள்ளது’ என மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கான ஐ.நா இயக்குநர் லூயிஸ் சார்பொன்னியு தெரிவித்தார். ‘சீனா, ரஸ்யா போன்ற நாடுகள், மனித உரிமைகள் என்கின்ற பெயர்களைக் கொண்ட அமைப்புக்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன’ என லூயிஸ் சார்பொன்னியு குறிப்பிட்டார்.

‘பாதுகாப்புச் சபையில் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கான ஆணையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் ரஸ்யா மற்றும் சீனா இதற்கான நிதியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். மனித உரிமைகளுக்கு பேச்சளவில் மட்டும் ஆதரவளிக்கும் நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். ஆகவே ரஸ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் வெற்றி பெறுவதற்கு நாம் அனுமதிக்கப் போகின்றோமா?’ என சார்பொன்னியு கேள்வி எழுப்பினார்.

‘சீனா தற்போது ஐ.நாவில் உண்மையான அரசியல் இயங்குவிசையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகளவான நிதிப்பங்களிப்பை மேற்கொள்ளும் இரண்டாவது நாடாக சீனா விளங்குகிறது. ஐ.நா மனித உரிமைச் செயற்பாடுகளுக்கான தனது ஆதரவை சீனா குறைத்து வருகிறது.

சீனா, ஐ.நா அமைப்புக்களில் தனிப்பட்ட உரிமைகளை விட ‘அமைதியை’ அதிகம் வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் தாம் கேட்பதையே அதிகம் விரும்புகின்றன’ என வெளியுறவுக் கோட்பாடுகளுக்கான ஐரோப்பிய சபைக்கான ஐ.நா வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.

சீனாவால் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் காண்பிக்கப்படுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாடுகள் வலுவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதாக மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சீனாவால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஐ.நாவில் சீனாவிற்கு மேலும் பலத்தைச் சேர்த்துள்ளது.

‘ஐ.நாவின் 5வது ஆணைக்குழுவானது மிக முக்கிய விவாதக் களமாக உள்ளது. எமது குழுவினர் மனித உரிமை விடயங்களை முன்வைப்பதற்கு மிகவும் போராடுகின்றனர். வரிவழங்குநருக்கு சிறந்த பெறுமதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைச் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகவும் மையப்புள்ளியாகவும் உள்ளதால் இதற்கான நிதியைக் குறைக்கக் கூடாது என்பது முக்கியமானதாகும்’ என இராஜதந்திரி மேலும் குறிப்பிட்டார்.

வழிமூலம்       – The guardian
ஆங்கிலத்தில் – Julian Borger
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *