மேலும்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அதிரடியாக கைது

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாகவும், உதவியாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே, இவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பணிப்பாளராக  கடமையாற்றியிருந்தார்.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பாதுகாப்பில் இராணுவ மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ மருத்துவமனைக்குச் சென்று மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கான விளக்கமறியல் உத்தரவை கல்கிசை நீதிவான், பிறப்பிப்பார் என்று கூறப்படுகிறது.

கீத் நொயார் கடத்தல் வழக்கில், குற்றப்புலனாய்வு பிரிவின் முன்பாக, நேற்று முன்னிலையாக வேண்டும் என்று மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நேற்றுக்காலை அவர் தலைவலி, குமட்டல் என்று காரணம் கூறி, கொழும்பு இராணுவ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்தே, நேற்று மாலை அங்கு சென்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அண்மையில் இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

அதன் பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *