மேலும்

ஆலயக் குருக்களைக் கொன்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய், புலனாய்வாளர்கள் 3 பேருக்கு மரணதண்டனை

gavelசங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,  அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி, நகைகள் மற்றும் உந்துருளியைக் கொள்ளையிட்ட சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு யாழ். மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள், சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள ஆலயக் குருக்களின் வீட்டுக்குள் புகுந்த ஆயுதபாணிகள், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு நகைகள் மற்றும் உந்துருளியை கொள்ளையிட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பத்தில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள்  துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களான, காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணியம் சிவரூபன் ஆகியோரும், சிறிலங்கா இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேனவும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதையடுத்து, 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்றன. விசாரணைகளின் முடிவில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்படி, ஆலயக் குருக்களைக் கொலை செய்த குற்றத்துக்காக எதிரிகள் மூவருக்கும், மரணதண்டனை விதிக்கப்படுகிறது, தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. குருக்களின் பிள்ளைகளை சுட்டு படுகாயப்படுத்தியமைக்கு மூன்று எதிரிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று நீதிபதி இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *