மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு
கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி, குண்டசாலைப் பகுதியில் உள்ள நட்டரன்பொத்த பகுதியில் இருந்த மஹாசோன் பலகாயவின் பணியகமே நேற்று சிறிலங்கா காவல்துறையினரைால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது, இனவாதத்தைக் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், ஆறு பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மஹாசோன் பலகாயவின் செய்தியாளர் சந்திப்புக்குப் பயன்படுத்தப்படும், ஒலிவாங்கி, இனவாதத்தைத் தூண்டும் கைப்பட்டிகள், கணினி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, மஹாசோன் பலகாயவின், தலைவரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.