மேலும்

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதமாக அதிகரிப்பு

voteசிறிலங்காவில் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29 வீதமாக அதிகரித்துள்ளது என்று தேர்தல் கண்காணப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

“உள்ளூராட்சித் தேர்தலில் வட்டார அடிப்படையில் 535 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும், 1991 பெண்கள், உள்ளூராட்சி சபைகளுக்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களால் மேலதிகப் பட்டியல்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, உள்ளூராட்சி சபைகளில் 2526 பெண் பிரதிநிதிகளின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலதிகப் பட்டியலின் மூலம் அதிகளவு பெண்களை ஐக்கிய தேசியக் கட்சியே நியமித்துள்ளது.

முன்னர் உள்ளூராட்சி சபைகளில் 1 வீதமாக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் இப்போது 29 வீதமாக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக பெரிய முன்னேற்றம்.

இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள், 17,128 பெண் வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தியிருந்தன.

இந்தத் தேர்தலின் மூலம், 8,721 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும், 15 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத இடத்தை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.

பருத்தித்துறை, மன்னார், முசலி, வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், மூதூர், காரைதீவு, திருக்கோவில், மன்முனை, வனாத்தவில்லு, கொட்டகல ஆகிய பி்ரதேச சபைகளிலும், திருகோணமலை மற்றும் கிண்ணியா நகரசபைகளிலுமே, பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியாதுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *