கண்டியில் காலவரையற்ற ஊரடங்கு – வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை
கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் இன்று முற்பகல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கண்டி மாவட்டம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஊரடங்கு நேரத்திலும், நேற்றிரவு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று முற்பகல் கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் எப்போது வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்படாததால், காலவரையறையின்றி நீடிக்கும் என்று தெரிய வருகிறது.
அதேவேளை, கண்டி மாவட்ட மக்களை வீடுகளுக்குள் அமைதியாக இருக்கும் படி, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டன
கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் காலவரையறையின்றி மூடப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.