சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கம்
சிறிலங்காவில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகளை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சமூக வலைத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கண்டியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பான தகவல்கள், படங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் பகிரப்பட்டதால், நிலைமைகள் மோசமடைந்ததைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிரப்படும் தகவல்களைக் கண்காணிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு இவை மெதுவாகவே, செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சமூக வலைத்தளங்களின் ஊடான தொடர்புகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் கண்டி உள்ளிட்ட சில பகுதிகளிலேயே, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான போதும், தற்போது நாடு முழுவதிலும் இவை முடக்கப்பட்டுள்ளன.
வைபர், வட்ஸ்அப் என்பன முடக்கப்பட்டுள்ளதால், இவற்றின் ஊடான தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.