அவசரகாலச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்- அமெரிக்கா அழுத்தம்
சிறிலங்காவில் நேற்று பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச்சட்டம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பரவியுள்ள நிலையில்- அவசரகாலச்சட்டம் நேற்று பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அமைதியான சகவாழ்வுக்கு முக்கியம்.
மத வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக செயற்படவும், மத சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டு இடங்களையும் பாதுகாக்க சிறிலங்கா அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப்பது முக்கியமானது.
அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்கும் அதேவேளை, அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரகாலச்சட்டத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.