மேலும்

மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

mahinda-maithriசிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சியமைக்க வருமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தன்னுடன் வந்தால், நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து, கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,

”சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் திட்டம், ஒரு தந்திரம்.

இப்போது நாங்கள் அவரது தலைமையின் கீழ், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள இணங்கினால், நிச்சயமாக பெருமளவு வாக்குகளை இழப்போம். ஏனென்றால், அவரது தலைமையின் கீழ் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.

பெப்ரவரி 10 ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் அவமானகரமான தோல்விக்கு அஞசுவதால் தான் அவர் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெறும். மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளார்கள். எமது வெற்றி உறுதியாகியுள்ளது.

ஐதேகவுடன் இணைந்து நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை காட்டிக் கொடுத்தவர்களைப் பாதுகாப்பாற்காக, நாங்கள் எமது வெற்றியைத் தியாகம் செய்ய வேண்டிய தேவை இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபரின் அழைப்புக் குறித்து கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே, பெப்ரவரி 10ஆம் நாளுக்குப் பின்னர், சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக இணைந்து கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *