மேலும்

சிறிலங்காவில் நம்பிக்கையூட்டக் கூடிய பொருளாதார வளர்ச்சி – அனைத்துலக நாணய நிதியம்

imf2017-2018 காலப்பகுதியில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கையூட்டக் கூடிய வகையில், இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.

உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற அனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கை நேற்று வொசிங்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலகப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில், 3.6 வீதமாகவும், 2018ஆம் ஆண்டில், 3.7 வீதமாகவும் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடி எதிர்கொள்ளப்பட்ட 2016ஆம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 3.2 வீதமாக இருந்தது.

அதேவேளை இந்த ஆண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4.7 வீதமாக நம்பிக்கையூட்டக் கூடிய வகையில், இருக்கும் என்றும்,அனைத்துலக நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. இது, 2018ஆம் ஆண்டில், 4.8 வீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழிவுகள் மற்றும் பின்தங்கிய சீர்திருத்தங்களால், இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 வீதத்துக்கு குறைவாகவே இருக்கும் என்ற சிறிலங்கா மத்திய வங்கியின் கணிப்புக்கு மாறாக, இந்தக் கணிப்பு அமைந்துள்ளது.

எனினும், தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது, சிறிலங்கா பின்தங்கிய நிலையில் உள்ளது.

2017இல் 6.7 வீதமாக உள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018இல் 7.4 வீதமாக அதிகரிக்கும் என்றும் அனைத்துலக நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.

பாகிஸ்தானில், இந்த ஆண்டு 5.3 வீதமும், அடுத்த ஆண்டில் 5.6 வீதமும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஸ் இந்த ஆண்டில் 7.1 வீத பொருளாதார வளர்ச்சியுடன் தெற்காசியப் பிராந்தியத்தில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *