மேலும்

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

ranjith siyambalapitiyaசம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையமே அமைக்கப்படும் என்று, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில், இந்தியாவின் முதலீட்டுடன், 500 மெகாவாட் அனல் மின் திட்டத்தை அமைக்க, இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில், 2011ஆம் ஆண்டு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

2013ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இது தொடர்பான கட்டுமான உடன்பாடும் சிறிலங்கா மின்சார சபைக்கும், இந்தியாவின் தேசிய அனல் மின்கழகத்துக்கும் இடையில்  கைச்சாத்திடப்பட்டது.

எனினும், சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டதுடன், சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்குமாறும் இந்தியாவிடம் கோரியது.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம், அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, இயற்கை எரிவாயு மின் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது. அதற்கு இந்தியாவும் இணங்கியிருந்தது.

எனினும், சம்பூரில் இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைக்க, மின்சாரசபையின் பொறியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

இந்தநிலையிலேயே, சம்பூரில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத, சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி திட்டங்களுக்கே மின்சார சபை முன்னுரிமை கொடுக்கும்.

தலா ஒரு மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட- சிறியளவிலான 60 சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, 20 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து  ஒரு அலகு மின்சாரத்தை 12.73 ரூபாவுக்கு மின்சார சபை கொள்வனவு செய்யும். ” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *