மேலும்

சட்டமூலத்தை நிறைவேற்றாவிடின் 100 மில்லியன் டொலர் கடன் ரத்து – உலக வங்கி எச்சரிக்கை

World-Bankகணக்காய்வுச் சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெறாவிடின், வரும் செப்ரெம்பர் மாதம் அளிக்க வேண்டிய 100 மில்லியன் டொலர் கடனுதவியை இடைநிறுத்தப் போவதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக வங்கி அதிகாரிகளுக்கும், சிறிலங்கா நிதியமைச்சு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜூன் 16ஆம் நாள் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்போது, கணக்காய்வு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என்று பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசகர் ஒருவரும், நிதியமைச்சின் அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு உலக வழங்கி அதிகாரிகள் மிகவும் கோபம் அடைந்தனர்.

இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கடினம் என்றும், அரசாங்கத்தில் உள்ள ஒரு உயர்மனிதர் இதனை எதிர்ப்பதாகவும், நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் அங்கு விளக்கமளித்திருந்தார்.

இந்த சட்டமூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிக அதிகாரங்களால் பெரும்பாலான அமைச்சுக்களின் செயலர்கள் அதனை எதிர்ப்பதாகவும், நிதியமைச்சு அதிகாரி கூறினார்.

எனினும், எந்த விலை கொடுத்தாவது இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டததில் பங்கேற்ற கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் வலியுறுத்தினர். அவர்களின் நிலைப்பாட்டுக்கு உலக வங்கி அதிகாரிகள் ஆதரவளித்தனர்.

அத்துடன் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு,  வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்காவுக்கு வழங்க வேண்டிய 100 மில்லியன் டொலர் கடனுதவியைப் பயன்படுத்திக் கொள்வதை விட வேறு வழியில்லை என்றும் உலக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்காக இந்த வாரம் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவைச் சந்திக்க உலக வங்கி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றினாலேயே, சிறிலங்காவுக்கு உலக வங்கியின் கடனுதவி கிடைக்கும் என்றும் அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கணக்காய்வு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் இது 2016 மார்ச் வரை பிற்போடப்பட்டது.

எனினும், இந்த சட்டமூலத்தின் மூலம் கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும் என்று கூறி சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

கடந்த 2016 மே 27ஆம் நாள் நடந்த ஜி-7 மாநாட்டில், கணக்காய்வு சட்டமூலம் எந்த தாமதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *