மேலும்

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறார் முதலமைச்சர் – சுமந்திரன் குற்றச்சாட்டு

sumanthiranமுதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமான உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-  

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்தமை, ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்துக்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் “அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்” என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது.

எமது வற்புறுத்தலின் காரணமாகத் தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பண மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார்.

அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன் போதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம்முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன் வைத்தார்.

குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி சேனாதிராஜாவுடனும் பேசினார். ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார்.

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்  இரா. சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாக க் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று, இரா. சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறு நாள் மாகாண சபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்த நாள் மாகாண சபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.

நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம்.

ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள் “உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறார் முதலமைச்சர் – சுமந்திரன் குற்றச்சாட்டு”

  1. மகேந்திரன் says:

    திரு:சுமந்திரன் அவர்கள் ஒரு புல்லுருவி எம்தேச மக்களே ஜனநாயகத்தின் மூலம் பதில்தரவேண்டும்

  2. Mahendra Thiru Mahesh
    Mahendra Thiru Mahesh says:

    உண்மையான குற்றவாளி யாரென மக்களுக்கு தெரியும்

Leave a Reply to Mahendra Thiru Mahesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *