மேலும்

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் இன்று கடையடைப்பு – பல பகுதிகள் முடக்கம்

north-hartal (1)வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் பேரவையினால்  அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் இன்று வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட நடடவடிக்கையைக் கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த தமிழ் மக்கள் பேரவை நேற்று அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் யாழ் குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை தொடக்கம் இயல்பு நிலை முடங்கியுள்ளது. போக்குவரத்துச் சேவைகள் வழமைபோல இடம்பெறவில்லை.

அத்தியாவசிய வணிக நிறுவனங்கள் தவிர, ஏனைய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகளும் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. சந்தைகளும் நடைபெறவில்லை.

யாழ். நகரத்தில் மாத்திரமன்றி, குடாநாட்டின் ஏனைய  நகரங்களான நெல்லியடி, சாவகச்சேரி, கொடிகாமம், பருத்தித்துறை உள்ளிட்ட இடங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வணிக நிலையங்களைத் திறக்க முயன்றவர்களுடன், ஏனையவர்கள் முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

north-hartal (1)north-hartal (3)north-hartal (4)north-hartal (5)north-hartal (6)

கிளிநொச்சியில் இன்று காலையில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததுடன், போக்குவரத்து சேவைகளும் குறைவாகவே இருந்தன. எனினும் மதியத்துக்குப் பின்னர் அங்கு வழமை நிலை திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. பாடசாலைகளுக்கு வந்த மாணவர்களும் திரும்பிச் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்புநிலை காணப்பட்டது. சில இடங்களிலேயே வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்படவில்லை. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மல்லாவி ஆகிய நகரங்களில் இயல்பு நிலை காணப்பட்டது. எனினும் முள்ளியவளையில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

வவுனியா மாவட்டத்தில், கடையடைப்புப் போராட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அங்கு வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன. போக்குவரத்துச் சேவைகள் வழமைபோல இயங்கின. பாடசாலைகள், அரச பணியகங்கள் என்பன வழக்கம் போலக் காணப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் கடையடைப்பினால் எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை என்றும், அங்கு வழமையான நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *