மேலும்

விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு

cm-npcவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதத்தை வரும் 9ஆம் நாள் நடத்துவதற்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது. முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிறப்பு அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதையடுத்து, விசாரணைக் குழுவின் அறிக்கையை அவையில் சமர்ப்பிப்பதற்காக, அவைத்தலைவரிடம் முதலமைச்சர் கையளித்தார்.

அத்துடன்,இந்த அறிக்கை தொடர்பாக விவாதத்தை இன்று ஒத்திவைத்து விட்டு, வரும் 9ஆம் நாள் நடத்துமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் சபையில் அறிவித்தார்.

அத்துடன் விசாரணைக் குழு தமது கருத்துக்களைக் கேட்கவில்லை அல்லது கருத்தில் கொள்ளவில்லை என்று அமைச்சர்கள் குற்றம்சாட்டியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அமைச்சர்கள் பதிலளிப்பதற்கு போதிக அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், விசாரணைகள் முறையாகவே இடம்பெற்றது என்றும் முதலமைச்சர் அவையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மாகாணசபை உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அவையில் இருந்து ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், அவை உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை பேசித் தீர்க்கலாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஊடகங்களை வெளியேற்றினால் மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் என்று அவர்கள் கருத்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக் குறித்த விசாரணை அறிக்கை மீது எதிர்வரும் 14ஆம் நாள் விவாதம் நடத்துவதற்கு வடக்கு மாகாண அவை தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *