மேலும்

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் – பரபரப்பான சூழலில் இன்று கூடவுள்ளது வடக்கு மாகாணசபை

npcவடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களும், மேற்படி இரு அமைச்சுக்களின் செயலர்களும் பதவி விலக வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்கனவே கூறியிருந்தார்.

எனினும் முதலமைச்சர் அவசரமாக கொழும்பு சென்றிருந்ததால் நேற்றைய அமர்வில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க இன்று சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் கூடவுள்ள வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவார்.

இதையடுத்து, அவையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஊடகம் ஒன்றில் அறிக்கையின் பரிந்துரைகள் கசிந்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பொதுச்செயலர் என்.சிறீகாந்தா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் அமைச்சர்கள் இருவரும் பதவி விலகும் அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், இவர்களை பதவி நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை முதலமைச்சருக்கு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை வடக்கு மாகாணசபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் யாழ். நகரில் உள்ள கட்சியின் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *