மேலும்

நிலைமாறும் உலகில் இந்தியா – லோகன் பரமசாமி

India-emblemசிறீலங்காவின் அரசியல் போக்கில் கீழிருந்து மேலாக அரசை மக்கள் ஏற்று கொள்ள வைக்கும் பொறிமுறையை உருவாக்கும் அதேவேளை, மேலிருந்து கீழான பொறிமுறையை உருவாக்கும் பொருட்டு இலகு கடன் வசதி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அதிகார கட்டமைப்புகளை அமைக்க வசதி செய்தல், போன்ற திட்டங்களை உருவாக்குவதன் ஊடாக மேலைத்தேய அரசுகள் தமது மூலோபாய மேலாதிக்க நலன்களை பெற்று கொள்ள முனைவதை காண கூடியதாக இருந்தது.

இந்த வகையில் சற்று பரந்த அளவிலே தெற்காசிய வல்லரசான இந்தியாவின் நிலை குறித்த மாற்றங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகிலேஅரசாங்கங்களும் அவற்றின் கொள்கைகளும் மாற்றங்களை காணும் அதேவேளை, அரசுகளின் ஐயஉணர்வும் அதனால் உருவாகக்கூடிய அதிஉச்ச அதிகாரத்தின் மீதான நாட்டமும்,  அதை அடைவதற்கான சொந்த முயற்சியும், பிரிக்க முடியாத நிரந்தர கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

அதாவது ஒவ்வொரு அரசும் தமது பாதுகாப்பை முக்கிய பண்பாக கொண்டுள்ளன.  வல்லரசுகள் ஏகாதிபத்தியத்தை நோக்காக  கொண்டே செயற்படுகின்றன.  ஏகாதிபத்திய போட்டி அரசுகள் அதிஉச்ச பாதுகாப்பை அடைவதில் இடைவிடாது நாட்டம் கொண்டியங்குகின்றன.

இந்த கட்டுரை த் தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, யதார்த்தவாத கோட்பாடுகளின் அடிப்படையில், அரசாங்கங்கள் அனைத்தையும் ஆளும் அரசாங்கம் ஒன்று உலகில் இல்லை. இதனால் அடாவடித்தனமே ஒழுங்காக ஆட்சி செய்கிறது. சிக்காகோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜேன்மேசைமர் அவர்களின் கோட்பாட்டு வரைபுகளுக்கு அமைய வல்லரசுகள் ஊகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன.

அரசுகள் ஒன்றுக்கொன்று எதிராகவே செயற்படுகின்றன. சில அரசுகள் பாதுகாப்புப் படைகளை அதிகம் வைத்திருப்பது இன்னமும் ஆபத்தானவையாக அமைகிறது. இதனால் இதர அரசுகளும் தமது பாதுகாப்பைப் பலப்படுத்த முனைகின்றன.

அரசுகள் மற்றைய அரசுகளின் இச்சை குறித்து நிச்சயமற்றவையாக உள்ளதால் எதிரி தம்மீது படையெடுக்கும் எண்ணம் உள்ளதா -இல்லையா என்பதை தெரிந்து கொள்வது கடினமானது. அறுபதுகளில்சீனா ,திபெத்திய நிலப்பரப்பினுள் படை எடுத்த காலம் தொட்டு, இந்தியா, சீன பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து ஐயம் கொண்ட நிலையே  உள்ளதைஇங்கு ஒப்பிடலாம்.

அதேவேளை சீன பொருளாதார மென்பலவளர்ச்சியும் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்தில் கடும் செல்வாக்கு செலுத்துவது தெற்காசிய பிராந்தியத்தில் இந்திய ஏகபோகத்தை சிக்கலுக்குள்ளாக்குவதாக பார்க்கப்படுகிறது.

இந்தியா இந்த நிலையை சுதாகரிக்கும் பொருட்டு அமெரிக்க ஆதரவை நாடி நிற்கிறது. மேலும் தனது பாதுகாப்பை மிக விரைவாக வலுவடைய செய்வதில் நாட்டம் கொண்டிருக்கிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்ய  ஆகிய மூன்று நாடுகளும் தத்தமது ஆயுத விற்பனை அறிக்கைகளில் தமது முதல்தர ஆயுத கொள்வனவாளராக இந்தியாவையே சுட்டிக்காட்டுகின்றன.

donald-trumpஇதனால் இந்திய ஆய்வாளர்கள் தமது நாட்டிற்கு மேலைத்தேய நாடுகளின் உதவியும் ஒத்துளைப்பும் பல்வேறு துறைகளிலும் தேவை என்பதை பார்வையாக கொண்டுள்ளனர். ஆனால் அண்மைய மாற்றங்கள் புதிய திருப்பங்களுக்கு வகை செய்யுமா என்பது கேள்வியாக உள்ளது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற  அமெரிக்க அதிபர்  தேர்தலை தொடர்ந்து இராசதந்திர தொடர்புகள் சற்று இளகிய தன்மையை பெற்றிருப்பதை இந்தியா உணர்ந்து கொண்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் இந்திய –அமெரிக்க உறவு பூகோள மூலோபாய பங்காளிகள் நிலையை எட்டி இருந்தது.

இருதரப்பாலும் பகிரப்பட்ட சனநாயக விழுமியங்களும்,  இருதரப்பு, பிராந்திய, உலக ப் பிரச்சினைகள் மீதான நலன்களும் இருதரப்பிடையேயும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அரசியல் பயணங்களும் இந்திய- அமெரிக்க உறவை பரந்த அளவிலே என்றுமில்லாதவாறு புதிய சிற்பவடிவமைப்பாக  மாற்றி இருந்தது.

இந்த உறவு பல்வேறு துறை சார்ந்ததாகவும் குறிப்பாக வர்த்தகம் நிதி முதலீடு, பாதுகாப்பு, கல்வித்துறை, விஞ்ஞானமும் தொழில் நுட்பமும், இணையப் பாதுகாப்பு, பொது அணு உற்பத்தி , தொழில்நுட்பம், விண்வெளி தொழில் நுட்பம், மென் பொருள் உற்பத்தி, சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் என எண்ணுக்கணக்கில்லாத வகையில் இந்திய அமெரிக்க இணைவு மேன்மை கண்டு வந்தது.

அமெரிக்காவின் வளர்ச்சியை தனது அளவுகோலாக கொண்டு, வளர்ச்சியின் எல்லைகளாக வகுக்கும் தன்மையை பொதுவாக சனத்தொகை கூடிய நாடுகள் அனைத்தும் கொண்டிருக்கின்றன. தெற்காசியாவில் சீன செல்வாக்கு அதிகரித்த வண்ணமே இருக்கும் போது இந்திய, அமெரிக்க தொடர்பும் தனது சமூக பொருளாதார வளர்ச்சியும் முக்கியமானதாக இந்திய அரச அதிகாரிகள் பார்க்கின்றனர். தெற்காசியாவிலே தனது மேலாண்மையை பேணும் வகையில் இந்திய சமூக பொருளாதார மாற்றங்களை அமெரிக்க சமூக பொருளாதார நிலைக்கு ஏற்ப மாற்றுவது என்பது இந்திய தலைமைத்துவங்களின் கனவாக இருந்தது.

புதிய அமெரிக்க தலைவர்  டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது அமெரிக்க தொழிற்சாலைகள்மூடப்படுவது குறித்தும் அமெரிக்க வேலைகளை கிழக்கு நாடுகள் கொள்ளை இடுவது குறித்தும் ஆக்ரோசமாக கூச்சல் இட்டிருந்தார். சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அமெரிக்க உற்பத்தி, வேலைவாய்ப்பை எடுத்து செல்வதால் அமெரிக்க தாய் நாட்டு கைத்தொழில் பேட்டைகள் மூடப்பட வேண்டி ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்திய தொழிலாளர்கள் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய பங்கு வகிப்பதால், அந்த துறையில் முக்கிய பாத்திரம் வகிக்கும் நிறுவனங்களான Infosys, Wipro, HCL Technologies ஆகியன ஏற்கனவே குறைந்த சம்பள செலவில் வேலை செய்யக் கூடிய இந்திய தொழிலாளர்களுக்கு பதிலாக அதிகமாக உள்நாட்டு சம்பளம் பெறும் அமெரிக்க தொழிலாளர்களை மாற்றிப்போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து  ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றதிலிருந்து தொலைபேசி வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்து கொண்டதை தவிர இந்திய பிரதமர் மோடி அவர்கள் இராசதந்திர தொடர்பாடல்கள் எதுவும் வைத்திருக்க வில்லை. ட்ரம்ப் அவர்கள் சர்வதேச இராசதந்திரத்தில் ஆர்வம் செலுத்தாத நிலையும், தனது அரசாங்க நிர்மாண பணிகளில் பல்வேறு சிரமங்களை கொண்டிருந்ததுவம் தான் இதற்கு காரணம் கூறப்பட்டது.

Narendra-Modi

இந்த நிலையில் மீண்டும் இந்திய -அமெரிக்க உறவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு தரப்பிலும் இருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் புலம்பெயர் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தேர்தல் பிரச்சார காலங்களில் குடியரசுக்கட்சி இந்து தொண்டு நிறுவனம் வைத்திருந்த வரவேற்பு கூட்டத்தில் ட்ரம்ப் அவர்கள் தான் ஒரு இந்து மத ரசிகன் என்றும் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தியா குறிப்பிட்ட ட்ரம்ப் அவர்களின் குணாதிசயம் எவ்வளவு சாதகமானது என்பதை கணிப்பிடும் ஆய்வாளர்கள்,புதிதாக பதவியேற்றதன் பின்பு ஆறு இந்திய-அமெரிக்கர்களை தனது நிர்வாக பணிகளில் இணைத்து கொண்டமையை குறிப்பிட்டு காட்டுகின்றனர். இது புலம் பெயர் இந்தியர்கள் தமது சொந்த நலன்களையும்பதவிகளையும் பெற்று கொள்ளும் அதேவேளை இந்திய அமெரிக்க நிலைப்பாட்டை நழுவ விடாது கவனித்து கொள்வதில்  கவனமாக இருப்பதையும்,இந்தியா அமெரிக்க உறவை பலமடங்கு அதிகரித்து கொள்வதில் மிக ஆர்வமாக இருப்பதையும் எடுத்து காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும் ட்ரம்ப் அவர்களின் பொருளாதார கொள்கையான பாதுகாப்புவாத தேசியவாத பொருளாதார போக்கானது, தகவல் தொடர்பு தொழில் நுட்ப வேலையாட்கள் 350 000 பேரின் வேலையும் 130 பில்லியன் டொலர் இந்திய வருமானமும் கேள்விக்கிடமாக இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலே தகவல் தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள் வேலையாட்களுக்கான நுழைவு அனுமதி மறுக்கப்படும் இடத்து பாரிய நிதி இழப்பும் வேலை இழப்பையும்  எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்பது பார்வையாக உள்ளது.

ஊகங்களையும் சந்தேகங்களையும் நம்பி அமெரிக்காவுடனான இந்திய வெளிவிவகார கொள்கை சென்று கொண்டு இருக்கும் அதேவேளை , சீன பொருளாதார வளர்ச்சியும், செல்வாக்கும் தெற்காசிய அயல் நாடுகளில் அதிகரித்திருப்பது இந்திய நிலைப்பாடுகளுக்கு ஏற்புடையதாக இந்திய ஆய்வாளர்கள் கருதவில்லை.

இந்த நிலையில் இருபத்திஓராம் நூற்றாண்டின் ஆரம்பப்படுகொலைகளாக பார்க்கப்படும் ஈழத்தமிழர் படுகொலை மாதத்தில் வெசாக் விளக்கேற்ற இந்தியப் பிரதமர் அவர்கள் சிறீலங்கா வருவது குறித்து அடுத்த வார கட்டுரையில் பார்க்கலாம்.

– லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

* கட்டுரையாளருக்கு கருத்துக்களை நேரடியாக அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி – loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *