மேலும்

அரசாங்கம் உத்தரவிட்டால் காணிகளை விடுவிக்கத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

Chrisanthe de Silvaசிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டால், பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த சந்திப்பு ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி தம்மிடம் இவ்வாறு குறிப்பிட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு  அமைச்சில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பிராந்திய இராணுவத் தலைமையக கட்டளை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன், ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

TNA-defence meeting (1)TNA-defence meeting (2)

அங்கு கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், காணிகள் விடுவிப்புத் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 19ஆம் நாள் முல்லைத்தீவிலும், ஏப்ரல் 20ஆம் நாள் யாழ்ப்பாணத்திலும், ஏப்ரல் 20ஆம் நாள் மாலையில் கிளிநொச்சியிலும் இந்தக் கூட்டங்கள் இடம்பெறும்.அதுபோல முள்ளிக்குளம் காணிகள் தொடர்பாக மன்னாரிலும் கூட்டம் இடம்பெறும்.

இந்தக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள், இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாக பேச்சு நடத்துவார்கள்.

அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளுக்கும் சென்று அவர்கள் பார்வையிட்டு, கலந்துரையாடுவார்கள். அதற்குப் பின்னர், அனைத்து காணிகள் தொடர்பாகவும் விபரங்கள் திரட்டப்பட்டு, மீண்டும் பாதுகாப்புச் செயலருடன் இன்னொரு கூட்டத்தை நடத்துவோம்.

கேப்பாப்பிலவிலும், முள்ளிக்குளத்திலும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நியாயமானவை. எமது மக்களின் காணிகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது.

மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

போர்க்காலத்தில் பாதுகாப்பைக் காரணம் காட்டி காணிகள் அபகரிக்கப்பட்டன. இப்போது போர் முடிந்து விட்டது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு என்பதை நாம் வலியுறுத்தினோம். தமது காணிகளில் வாழும் உரிமை அந்த மக்களுக்கு இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை  நானும்,  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். இராணுவ அதிகாரிகளுடனான கூட்டத்துக்கு தாம் ஏற்பாடு செய்து தருவதாக அவர் கூறியிருந்தார். அதற்கமையவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, இராணுவத் தளபதி, காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத்துக்கு அதிகாரமில்லை. இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு  அரசாங்க அதிகாரிகளின் அனுமதி தேவை.

அரசாங்கம் உத்தரவிட்டால், காணிகளை உடனடியாகவே விடுவிக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி கூறினார்.

பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவ முகாம்களை இடமாற்றம் செய்வதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *