மேலும்

அம்பாந்தோட்டையில் சீன கடற்படைத் தளம் உண்மையாகிவிடும் – இந்திய முன்னாள் தளபதி எச்சரிக்கை

Vice Admiral Arun Kumar Singhஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான  உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், அங்கு சீன கடற்படைத் தளமும்,  சீன விமானப்படைத் தளமும் அமைக்கப்படுவது உண்மையாகி விடும் என்று இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அருண்குமார் சிங் எச்சரிக்கை செய்துள்ளார்.

‘சீனாவின் காசோலைப் புத்தக இராஜதந்திரம்’ என்ற தலைப்பில் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளிதழில், எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதியாகவும், கடலோரக் காவல் படையின் பணிப்பாளராகவும் பணியாற்றிய வைஸ் அட்மிரல் அருண்குமார் சிங் தனது கட்டுரையில் சிறிலங்காவில் சீனத் தலையீடு தொடர்பாக குறிப்பிடுகையில்,

”சீனாவின் காசோலைப் புத்தக இராஜதந்திரத்தில் இருந்து மோசமான பாடத்தைக் கற்ற முதலாவது நாடு சிறிலங்காவாகும்.

முன்னைய சீன சார்ப்பு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், புதிய தொடருந்து பாதையை அமைக்கவும், கொழும்பு துறைமுகத்தில் புதிய கொள்கலன் இறங்குதுறை ஒன்றை அமைக்கவும், காலியையும் கொழும்பையும் இணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைக்கவும்,  அம்பாந்தோட்டை அருகே புதிதாக மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை அமைக்கவும் சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று அம்பாந்தோட்டை துறைமுகமும், அதற்கு அருகேயுள்ள விமான நிலையமும், பயன்படுத்தப்படாதவையாக இருப்பதுடன், சிறிலங்காவுக்கு ஒரு நிதிச் சுமையாகவும் மாறி விட்டன.

சீனா சுமார் 9 பில்லியன் டொலரை முதலீடு செய்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்காக 1.1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாதிருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடன் நிவாரணம் தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படவுள்ளது. இதன்படி, சின நிறுவனம் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின்  60 தொடக்கம் 80 வீதம் வரையான முகாமைத்துவத்தை, 99 அல்லது 50 ஆண்டுகள் வரையில் கட்டுப்படுத்தும் குத்தகையைப் பெற்றுக் கொள்ளவுள்ளது.

இந்த உடன்பாடு சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கடற்படைத் தளமும், அதற்கு அருகில் உள்ள விமான நிலையத்தில் சீனாவின் விமானப்படைத் தளமும் அமைக்கப்படுவது உண்மையாகி விடக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *