மேலும்

சிறிலங்காவுக்கான சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்

Dr Hirato Izumi

கலாநிதி ஹிராடோ இசுமி

சிறிலங்காவில் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு பிரதிநிதி ஒருவரை ஜப்பான் நியமிக்கவுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யொஷிஹிடே சுகா இதனைத் தெரிவித்துள்ளார்.

ரோக்கியோவில் நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா பிரதமருக்கும், ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யொஷிஹிடே சுகாவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போதே,ஜப்பானிய பிரதமருக்கான ஆலோசகர் கலாநிதி ஹிரடோ இசுமியை, சிறிலங்காவுக்கான சிறப்புப் பிரதிநிதியாக ஜப்பான் நியமிக்கவுள்ளதாக, யொஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதை, மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

Yoshihide Suga - Ranil Wickremesinghe

இதன் போது, பிராந்தியத்தின் கல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு சிறிலங்காவுக்கு இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் மாநாடு ஒன்றை நடத்த சிறிலங்கா திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவது தொடர்பான பொதுவான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தாம் பரிந்துரைத்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தொலைக்காட்சிகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2002ஆம் ஆண்டு சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சிறப்புப் பிரதிநிதியாக யசூஷி அகாஷியை நியமித்திருந்தது. இவர் சிறிலங்காவில் போர்நிறுத்த காலத்திலும், போர்க்காலத்திலும், போருக்குப் பிந்திய காலகட்டத்திலும், 20இற்கும் அதிகமான பயணங்களை சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *