மேலும்

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்ட  A/HRC/34/L.1 தீர்மானம் சற்று முன்னர் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகளால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின்  இந்த தீர்மானத்தை முன்வைத்திருந்தன. இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா உள்ளிட்ட 36 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

இந்த தீர்மானம் சற்று முன்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் சார்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

இந்த தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், நீதியை நிலைநாட்டுவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி வலியுறுத்தினார்.

பிரித்தானியப் பிரதிநிதி  பேசிய போது, 31/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்துள்ள 24 மாத வாய்ப்பை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சிறிலங்காவின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உரையாற்றினார். அவர் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் இணைந்து செயற்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, தீர்மானத்தில் திருத்தங்கள் முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எந்த திருத்தமும் முன்வைக்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கை இருக்கிறதா என்று பேரவைத் தலைவர் கோரினார்.

எனினும் எந்த நாடும் வாக்கெடுப்பு நடத்தக் கோராத நிலையில்,  A/HRC/34/L.1 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *