மேலும்

சிறிலங்காவின் தோல்விக்கு வளைந்து கொடுக்காத இனநாயகமே காரணம் – உருத்திரகுமாரன்

ruthrakumaranஐ.நா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதிலுரைத்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரின் உரை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் ஊறிப்போன இனநாயகத்தினதும் அவர்களது தேவைகளினதும் வெளிப்பாடேயொழிய வேறொன்றுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் முன்வைத்திருந்த ஒவ்வொரு விடயங்களை அம்பலப்படுத்தும் 11 விவகாரங்களை மையப்பொருளாக் கொண்டு பிரதமர் வி.உருத்திரகுமாரனின் பதிலுரை வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள 12 பக்க பதிலுரையின் முதன்மை கூறுகளின் தமிழாக்கம் பின்வருமாறு :

சிறிலங்காவின் தேசக் கட்டுமானம் தோற்றதற்கு சிறிலங்கா அரசின் இனநாயகமே காரணம்!

முதன்மைக் கூறுகள்

1) அயல்நாட்டு நீதிகளின் பங்கேற்பை எதிர்ப்பது  அரசியலன்று, இனவாதமே.

2) கட்டாயக் காணாமற்போகச் செய்தல் பற்றிய ஒப்பந்தத்தில் சிறிலங்கா இணைந்து கொண்டதால், பாதிப்புற்ற தரப்பினருக்குப் பன்னாட்டுத் தீர்வும் இல்லை, உள்நாட்டுத் தீர்வும் இல்லை.

3) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் குறி தமிழர்களே, அது சிறிலங்காவில் மெய்ந்நிலைப் பிரிவினையைத் தோற்றுவித்து விட்டது.

4) பயங்கரவாதம் பற்றிய ஐநா தீர்மானம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது.

5) கைத்துப்பாக்கி ஏந்திய சாதாரண உடைப் பாதுகாப்புப் படையினர் – இராணுவ ஆளுகையின் இரண்டாம் கட்டம்.

6) ஐநா அதிகாரியின் எச்சரிக்கை.

7) அரசமைப்புச் சட்டம் எனும் கானல்நீர்.

8) சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு என்று உறுதியளித்துத் தேர்தலில் பெற்ற வெற்றி சிங்கள மேட்டுக்குடியினரிடையே அதிகாரப் பகிர்வில் போய் முடிந்துள்ளது.

9) தமிழ் நிலத்தில் சிங்கள இராணுவமயம்.

10) அரசே அமர்த்திய கலந்தாய்வுச் செயலணியின் பரிந்துரைகளை மதியாமை.

11) பாலியல் வல்லுறவு முகாம்கள்.

 செய்நோக்குச் சுருக்கம்

மனித உரிமை மன்றத்தின் 34ஆம் அமர்வில் சிறிலங்காவின் அயலுறவு அமைச்சர் ஆற்றிய உரைக்கான மறுமொழியில் தேசக் கட்டுமானம் தோல்வியுற்றதாக சிறிலங்காவின் அயலுறவுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ள அந்தத் தோல்விக்கு சிறிலங்கா அரசின் வளைந்து கொடுக்காத இனநாயகமே (ethnocracy) காரணம் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சொல்கிறது.

உலகறிந்த இந்த உண்மைக்குச் சான்றாக, தமிழர்களுக்கும் அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களுக்கும் இடையிலான முந்தைய உடன்பாடுகள் தோல்வியில் முடிந்ததை இந்த மறுமொழி எடுத்துக்காட்டுகிறது. தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் எதுவுமின்றி சிறிலங்கா ஆயுதப் படைகள் குற்றம் புரிவதைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பல்வேறு ஆணையங்கள் எதிர்ப்புக்கு உள்ளாயின அல்லது செயலாக்கப்படாமல் போயின என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது

சிறிலங்கா அயலுறவுத் துறை அமைச்சர் ‘சாதனைகள்’ என்று எடுத்துக்காட்டிய செய்திகளின் உண்மைநிலையையும் நா.க.த.அ. மறுமொழி முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் (OMP)) என்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பாதிப்புற்றவர்களைக் கலந்து கொள்ளவில்லை என்றும், பன்னாட்டு ஈடுபாடு வேண்டுமென தப்பிப்பிழைத்தவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டது என்றும், காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தைச் செயல்வடிவாக்கத் தவறி விட்டது என்றும் சுட்டிக்காட்டுகிறது.

கட்டாயக் காணாமற்போகச் செய்தல் பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து கொண்டிருப்பதைப் பொறுத்த வரை, ஒப்பந்தத்தைச் செயலுக்குக் கொண்டுவர உள்நாட்டுச் சட்டம் இயற்றப்படவில்லை என்றும், ஒப்பந்தத்தின் 31ஆம் உறுப்பின்படி பாதிப்புற்ற தரப்பினர் பன்னாட்டுத் தீர்வை நாடுவதற்கு இடமளிக்கும்படி சாற்றுரை (பிரகடனம்) செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது. கட்டாயக் காணாமற்போகச் செய்தல் என்பது தொடர்ந்து நடைபெறும் குற்றமாகும் என்பதை எடுத்துக்காட்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க. மறுமொழி, காணாமற்போனவர்களுக்கு ‘ஆளில்லை’ எனும் சான்றிதழ் வழங்குவது சிக்கலைக் குழிதோண்டிப் புதைக்கும் தந்திரமே என்று எடுத்துக்காட்டுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் ஐநா பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, சுதந்திர அரசு வேண்டுமென அமைதி வழியில் வலியுறுத்துகிற அமைப்புகளையும் தனிமனிதர்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டிருப்பதை நா.க.த.அ. மறுமொழி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பது பேச்சுரிமையையும், மனசாட்சி உரிமையையும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் மீறுவதாகும் என்று வாதிடுகிறது. சிறிலங்கா இராணுவம் கிட்டத்தட்ட முழுமையாகவே சிங்கள இராணுவமாய் இருப்பதாலும், வடக்கு மாகாணத்தில் தகவுமீறி   அளவுக்கதிகமாகவே இருந்து வருவதாலும் ஆக்கிரமிப்புப் படையாகப் பார்க்கப்படுகிறது என்று ஐநா சிறுபான்மைச் சிக்கல்கள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ள கருத்தை மறுமொழி சுட்டிக்காட்டுகிறது.

அண்மையில் ஏகே47 எந்திரத் துப்பாக்கி ஏந்திய புதிய இராணுவத்தினருக்கு பதிலாக, கைத்துப்பாக்கி ஏந்திய சாதாரண உடையணிந்த பாதுகாப்புப் படையினரை நிறுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டும் மறுமொழி இது தமிழ்ப் பகுதிகளில் இராணுவ ஆளுகையின் இரண்டாம் கட்டமே என்று வாதிடுகிறது. இராணுவம் இருப்புக்கொள்வது தமிழர்களின் உடல்சார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, தமிழ்ச் சமுதாயத்தில் பன்னாட்டுப் படைப்பாற்றலுக்கும் பொருளியல் செயற்பாட்டுக்கும் மனத்தடையும் ஆகிறது.

அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தச் செயல்வழி வெறும் கானல்நீரே என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்க மறுமொழி சுட்டிக்காட்டுகிறது. எப்படி என்றால், அது தமிழர்களைத் தனியொரு தேசிய இனமாகவோ, வடக்குகிழக்கைத் தமிழர் வாழும் பகுதிகளாகவோ அறிந்தேற்கத் தவறி விட்டது. இந்த வரலாற்றுவழி, அரசியல்வழி மெய்ந்நடப்பை 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கை அறிந்தேற்றது. இப்போது முன்மொழியப்படும் அரசமைப்புச் சட்ட வரைவுகள் செயலளவில் ஒரு பின்னெடுப்பே தவிர முன்னேற்றம் அன்று.

கட்டாயக் காணாமற்போகச் செய்தல்கள் பற்றிய செயற்குழு (WGEID), சித்திரவதைக்கு எதிரான குழு (CAT), பெண்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான குழு (CEDAW) ஆகிய அமைப்புகள் முன்மொழிந்த பரிந்துரைகளை சிறிலங்கா செயலாக்கத் தவறி விட்டது என்பதை நா.க.த.அ. மறுமொழி கருத்தில் கொள்கிறது, தமிழர்களுக்கு எதிரான இனவாதம் வலிமையோடு இருப்பதால்தான் இந்த முறைகேடுகள் இடம்பெற முடிகிறது என்று என்று இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய குழு ( CERD) கூறியிருப்பதை அது சுட்டுகிறது.

முடிவில், பன்னாட்டு உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) வெளிப்படுத்தியுள்ள ‘பாலியல் வல்லுறவு முகாம்கள்’ போன்ற செய்திகள் குறித்து அமைச்சர் எப்படி வாய்மூடி மௌனம் காக்கிறார் என்பதை மறுமொழி எடுத்துக்காட்டுகிறது. இன்று ஒரு நாட்டின் பாதுகாப்புப் படைகள் இவ்வாறான முகாம்கள் வைத்து நடத்துவது ஜப்பானியப் பேரரசுப் படை இரண்டாம் உலகப் போரின் போது இதுபோன்ற முகாம்கள் வைத்திருந்த காலத்துக்குப் பின்வந்த அரிதான ஒரு ஆவணச் சான்றாக அமையும்.

முடிவுக் குறிப்பு

சிறிலங்கா அரசின் வளைந்து கொடுக்காத இனநாயகத் தன்மை காரணமாக அவ்வரசு பாதிக்கப்படட தமிழருக்கு நிலைமாற்று நீதியினை வழங்கப் போவதுமில்லை. இலங்கைத்தீவில் இரு இனங்களும் சுதந்திரமாகவும் கௌரவத்தோடும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய இணக்கப்பாட்டுக்கான பாதையில் இணைந்துகொள்ளப் போவதுமில்லை.

மனித உரிமை மன்றம் 2015 இல் எடுத்த தீர்மானம் 30-1 இனை அப்படியே இருக்கவிடுவதென முடிவுசெய்து அதன்பின் இரண்டாண்டு காலநீட்டிப்புக் கொடுத்தாலென்ன ஏன் இருபதாண்டு காலநீட்டிப்புக் கொடுத்தாலுமென்ன அதனால் சிறிலங்காவில் எவ்வித முன்னேற்றமோ  மாற்றமோ வரப்போவதில்லை என்பதே எமது தெளிவான பார்வையாகும்.

எம்மைப் பொறுத்த வரையில் ஐநா மனித உரிமை மன்றத்தில் அயலுறவுத் துறை அமைச்சர் சமரவீர ஆற்றிய உரையின் வெற்றுப்பேச்சு அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசின் ஊறிப்போன இனநாயகத்தினதும் அவர்களது தேவைகளினதும் வெளிப்பாடேயொழிய வேறொன்றுமில்லை.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் பதிலுரையின் முதன்மைக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *