மேலும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா

Erin-Barclayஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே நேற்று உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில், சிறிலங்கா குறித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் அதுபற்றி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், சிறிலங்காவை ஒரு உதாரணமாக மாத்திரம் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் என்று வரும் போது, எந்த நாட்டையும் கண்காணிப்பில் இருந்து தப்ப விடக் கூடாது என்றும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அனைத்து நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும், நியாயமாகவும், பக்கசார்பின்றியும் செயற்பட வேண்டும் என்றும், எரின் பார்க்லே காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இஸ்ரேல் மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொடர் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், சொந்த அரசுகளால் துன்புறுத்தப்படும் மக்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை போதிய கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை மோசமாக மீறும் சிரியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை காத்திரமாகச் செயற்படத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை  எப்போது முழுமையாக செயற்படத் தொடங்கி, உறுதிமொழிகள் மற்றும் கடமைகளை நினைவூட்டுகின்றதோ,  அந்தச் சூழலியே சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப் பெறும் என்றும், அவர் கூறியிருந்தார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை  பக்கச்சார்பற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தினால், ஆணையத்தின் செயற்பாட்டை மேலும் பலமுடையதாக்கும் என்றும் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே, சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டை முன்னுதாரணமாகவும் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவில் கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியும், சீர்திருத்தங்களின் முன்னேற்றத்துக்கான வினையூக்கியாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடு அமைந்திருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *