மேலும்

அரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த

mahinda-amaraweeraபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“தற்போது பனிமூட்டமான காலநிலை என்பதனால், 2017 ல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது குறித்துச் சிலர் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்வுகூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டில் அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதற்கு கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கும் எதிர்வுகூறுபவர்களுக்கும் ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன்.

காணும் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை 2020ம் ஆண்டு வரை எவராலும் கவிழ்க்கவோ, அசைக்கவோ முடியாது.

இந்த அரசை மாற்ற வேண்டுமானால் அதற்குரிய முழு அதிகாரமும் சிறிலங்கா அதிபரிடமே  உள்ளது.

எனினும் இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அவரால் கூட நாடாளுமன்றத்தை க​லைக்க முடியாது.

நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின்படி, இந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரையும் பயணிக்கும்.

எனவே அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக கனவு காண்பவர்களின் கனவு வெறும் பகல் கனவாகவே இருக்கும்.

கனவு காண்பதற்கு சிலருக்கு உரிமையிருக்கின்றது என்றாலும் அந்த கனவை நனவாக்குவது எளிதான காரியமல்ல.

மைத்திரிபால சிறிசேனவின் அரசை வீழ்த்துதற்கு அல்லது கவிழ்ப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *