மேலும்

இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் ஐஎஸ் செயற்பாடுகள் – அட்மிரல் ஹரி ஹரிஸ் கவலை

galle_dialogue_2016-2இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ்  தெரிவித்துள்ளார்.

நேற்று  சிறிலங்காவில் ஆரம்பமாகிய காலி கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடல் -2016ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவர் தனது உரையில், இந்திய பசுபிக் பிராந்திய நாடுகள் மத்தியில் கடல் சார் பாதுகாப்புத் தகவல்களைப் பரிமாறுவது தொடர்பாகவும், கடல்சார் ஆதிக்க விழிப்புணர்வு தொடர்பாகாவும் ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.

நாம் வாழும் பூமியானது சமுத்திரத்தால் அதிகம் சூழப்பட்டுள்ளதால் இதனை ‘பூமி’ என அழைப்பதை விட ‘சமுத்திரம்’ என அழைக்கவேண்டும் என விஞ்ஞான ஆய்வாளரான ஆர்தர் சி.கிளார்க் கூறியது போன்று, நாம் சமுத்திரத்தால் அதிகம் சூழப்பட்டுள்ளதால் கடல்சார் கூட்டுறவின் முக்கியத்துவம் தொடர்பாக அமெரிக்கக் கடற்படைத் தளபதி ஹரி ஹரிஸ் தனது உரையில் வலியுறுத்தினார்.

எந்தவொரு தனிப்பட்ட நாட்டினாலும் கட்டுப்படுத்த முடியாத கடற்பரப்பில் எவரும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் தென்சீனக் கடலில் சுதந்திரமாகப் பயணிப்பதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கக் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்தார்.

இந்திய பசுபிக் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் இப்பிராந்தியத்தின் கடல்சார் கூட்டுறவை ஏற்படுத்தக்கூடிய மையம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் காலி கடல்சார் பாதுகாப்புக்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா தெரிவித்தார்.

அத்துடன் பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பிற்கான பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும் எனவும் இந்தியக் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்தார்.

பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியாவினால் உருவாக்கப்பட்டு வரும் முறைமைகள் தொடர்பான விரிவான விளக்கம் ஒன்றையும் அட்மிரல் லம்பா தெரிவித்தார். இந்தியாவானது தனது பிராந்திய நாடுகளுடன் பல்வேறு கூட்டு கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் இந்தியக் கடற்படைத் தளபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

இவ்வாறான ஒத்துழைப்பின் பயனாகவே, 2014 தொடக்கம் அரேபியக் கடலில் எவ்வித கடற்கொள்ளையும் இடம்பெறவில்லை எனவும் இந்தியக் கடற்படைத் தளபதி சுட்டிக்காட்டினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘முதலில் அயல்நாடுகள்’ என்கின்ற கோட்பாடானது இப்பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை உருவாக்க உதவியுள்ளது எனவும் இந்தியக் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

தீவிரவாதிகள், கடற் கொள்ளையர்கள், ஆட்கடத்தல்கள், கடல் ஆதிக்கம் போன்ற பல்வேறு பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. நாடுகளுக்கு இடையிலான கடல்சார் முரண்பாடுகள் போன்ற பாரம்பரிய அச்சுறுத்தல்கள் பல தற்போது தீர்க்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, 2014ல் ஐ.நா நிரந்தர நீதிமன்றான ஹேக்கில் வைத்து இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய இரு நாடுகளும் நீதிமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.

கடல் அலைகள் உயருதல் போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்நோக்குவதற்கான பொறிமுறைகளை வரைவதன் மூலம் கரையோரத்தில் வாழும் மக்கள் சந்திக்கும் இழப்புக்களைத் தவிர்க்க முடியும் எனவும் ஆகவே இதற்கான முயற்சிகளை கடல்சார் வல்லுனர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்தியக் கடற்படைத் தளபதி தனது உரையின் போது கேட்டுக் கொண்டார்.

ஐ.நா கடல் சார் சட்டத்தின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளுக்கு ஏற்ப தென்சீனக் கடலில் சுதந்திரமாகப் பயணிப்பதற்கான நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறும் அட்மிரல் லம்பா வலியுறுத்தினார்.

கடல்சார் பிரச்சினைகளுக்கு ஜனநாயக அணுகுமுறை மூலம் தீர்வுகாணுமாறும் எந்தவொரு நாடும் கடல்சார் பாதுகாப்புத் தொடர்பில் ‘சர்வ வல்லமை படைத்தவர்கள்’ என்றோ அல்லது ‘அதிலிருந்து தூரவிலக வேண்டும்’ என்றோ நினைக்க முடியாது எனவும் சீனக் கடற்படையின் துணைத் தளபதி றியர் அட்மிரல் வாங்க் டசோங்க் தெரிவித்தார்.

அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் கடல் சார் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் சீனத் துணைத் தளபதி கோரிக்கை விடுத்தார்.

சமாதானம் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட பூகோள அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே சீனாவால் ஒரு அணை மற்றும் ஒரு பாதை என்கின்ற கடல்சார் பாதுகாப்புத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுவதாகவும் அட்மிரல் டசோங்க் குறிப்பிட்டார்.

சிறிலங்காவானது தனது கடற்பரப்பில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தோற்கடித்துள்ளதாகவும் இதன்காரணமாக இது தனது பிராந்தியக் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்காற்ற முடிவதாகவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *