மேலும்

சிறிலங்கா குறித்த கருத்துக்களுக்காக சீனத் தூதுவர் வருத்தம்

Yi Xianliangஅண்மையில் தாம் வெளியிட்டகருத்துகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனத் தூதுவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு, கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதிக வட்டிக்கு கடன் கொடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு அதிக வட்டியை சீனா அறவிடுகிறது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் கடன் கேட்கிறார்கள் என்றும் சீனத் தூதுவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சீனத் தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து விளக்கம் கோரத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த திங்கட்கிழமை காலை சீனத் தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாக வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோனைத் தொடர்பு கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தூதுவருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டாம் என்றும், தொலைபேசியில் பேசுமாறும் கூறியிருந்தார்.

இதற்கமைய, வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், சீனத் தூதுவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சி்றிலங்காவின் வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் மூலம் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, தமது கருத்துக்கள் சிறிலங்காவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக, சீனத் தூதுவர் கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *