மேலும்

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு நிதியளித்த சீன நிறுவனம் மீது வழக்கு

China Harbour Engineering Companyகடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு நிதியளித்ததாக சீன நிறுவனத்தின் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளது.

சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்தித் திட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும், சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மீதே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான பி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று, சிறிலங்கா காவல்துறையின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னர் சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்தினால், மேற்கொள்ளப்பட்ட 3,117 மில்லியன் ரூபா பெறுமதியான 11 சந்தேகத்துக்கிடமான பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தது.

இந்த விசாரணைகளில், 2014 டிசெம்பர் 12, 2015 ஜனவரி 7, ஆகிய நாட்களில் சீன நிறுவனத்தினால் மூன்று காசோலைகள் கம்பகாவிலுள்ள நிறுவனம் ஒன்றின் பெயருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பணம், தொப்பிகள் மற்றும் ரிசேட்களை கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னொரு 5 மில்லியன் ரூபா காசோலை மகிந்த ராஜபக்சவை வெளிப்படையாக ஆதரித்து பரப்புரை செய்த கொழும்பிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரின் பெயருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த பிக்குவிடம், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்ட போது, அந்த காசோலையை தனது நிரந்தர வைப்பு கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், அந்த நிதியை சில சீன கனவான்கள் நன்கொடையாக வழங்கியதாகவும், எந்த சீன நிறுவனமும் அதில் தொடர்புபட்டுள்ளதா என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு எழுந்த போது, குறிப்பிட்ட சீன நிறுவனம் அதனை பொய்யான அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று நிராகரித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *