மேலும்

அனுமன் பாலம் தேவையில்லை – இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா நிராகரிப்பு

lakshman kiriellaதனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில், “அனுமன்” பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல-

“தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே “அனுமான்” பாலம் அமைக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

தனது இந்திய பயணத்தின் போது இந்தப் பாலம் அமைப்பது தொடர்பாக பேச்சுகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானநிலையில் இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்றும் அது தொடர்பாக சிறிலங்காவுடன் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில போன்றவர்கள், அனுமன் பாலம் தொடர்பாக இந்திய அமைச்சரின் கருத்தை பெரிதுபடுத்தி பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர்.

தேசப்பற்று தொடர்பாக பேசும் கம்மன்பில உள்நாட்டில் சிறிலங்கா பிரதமர் சொன்னதை நம்பாது, இந்திய மத்திய அமைச்சர்கள் கூறியதை நம்பி பேசுகிறார். அதன் மூலம் அவரது அரசியல் வங்குரோத்து நிலை புலப்படுகிறது.

தமிழ் நாட்டில் சேது சமுத்திர திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்தியாவிற்குள்ளே எதிர்ப்பு தோன்றியது. சூழல் பாதிக்கப்படும், உயிரியல் பன்முகத்தன்மை அழிவுக்குள்ளாகும் என கடும் எதிர்ப்பு தலைதூக்கியதால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டது.

இதேபோன்று அனுமான் பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனைக்கும் அந்த நாட்டுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பும்.

எமது நாட்டுக்கு அனுமான் பாலம் அவசியமில்லை. இந்திய அமைச்சரின் யோசனையை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். நிராகரிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *