மேலும்

வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு ?

J-Prakasamவெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. – தமிழ்நாட்டில் இருந்து புதினப்பலகைக்காக பா.செயப்பிரகாசம்.

புத்தாண்டுக் கொண்டாட்டம் வாசலில் நிற்கிறது. வரலாறு, பாரம்பரியம், பண்பாடு,வாழ்வியல் என தமிழ்ச்சமூகத்திற்கு உரித்தானதாக எவைகளைக் கருதுகிறோமோ, அத்தனையையும் இவ்வளவுதானா என கழித்துக் கட்டும் அளவுக்கு ஒவ்வொரு தடவையும் அரங்கேறி முடிகிறது, எல்லைமீறிப் போனாலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ” கடிதோச்சி மெல்ல எறிக” என்கிற கண்டும் காணா வழிமுறையை காவல் துறையும் அரசும் கைக்கொள்ளும் என்பதில் அய்யமில்லை.

“எங்களுடைய இப்போதைய முயற்சி இது தான். எமக்கும் எம்மால் ஆளப்படுவோருக்குமிடையில் விவரங்களைப் பரிமாறக் கூடிய ஒரு கும்பலை உருவாக்குவோம். அவா்கள் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். கருத்தாலும்இ மனத்தாலும்இ புத்தியாலும் சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்”.

அதிகாரக் காற்றுக்கும், அடிமை மனோபாவத்துக்கும் வளைகிற இந்திய நாணல்களை உருவாக்குவது பற்றி 1835-ல் மெக்காலே அமைத்துக் கொடுத்த சாலை இது. மெக்காலே உருவாக்கிக் கொடுத்தது கல்வி முறை மட்டுமல்ல. நிர்வாகப் பிரியர்களுக்கு அதிகாரப் படிநிலைகளையும் அதனூடாய் வடிவமைத்துத் தந்தார். இவை ஆட்சிக் குணங்களாகக் கருதப்பட்டன. ஆட்சியை இடையீடின்றி எடுத்துச் செல்ல நியமிக்கப்பட்ட நடுத்தரவர்க்கம் இந்த அதிகாரப் படிநிலையை ’ஆவிசேர’ கட்டியணைத்துக் கொண்டது.

மேலிருப்பவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் பணிந்து, கைகட்டி அடிமையாய் நடக்க வேண்டும் என்பதே அதிகாரப் படிநிலை . நிலஉடமைப் பண்ணை நாட்களில் இருந்த அடிமை முறை போல, அதற்கு உவப்பான மற்றொரு அதிகாரமுறை உருவானது. கீழிருக்கும் பணியாளர்கள் பற்றி மதிப்பீடு செய்து எழுதும் மந்தண அறிக்கை முறை (Confidential Report) கொண்டு வரப்பட்டது. மேலிருக்கும் அதிகாரிகள் எழுதினார்கள். ஒரு அரசுப் பணியாளனின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வாழ்வு முன்னேற்றம் அனைத்தும் இந்த மந்தண அறிக்கையால் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மேலிருப்பவர்கள் பற்றி கீழிருக்கும் பணியாளர்கள் மந்தண அறிக்கை தருகிற சனநாயகம் அறிமுகப்படுத்தப் படவில்லை.மேலிருப்போர் பற்றிக் கொடுக்கும் புகார்கள் எடுபடவில்லை.சனநாயக அறம் குறித்து கவலை கொள்ளாதவர்கள்தாம் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க முடியும் என்பதை, சமகாலத்தில் போலவே அன்றும் தரிசிக்க முடிந்தது .

தம்கீழ் சேவகம் செய்யும் இந்தியர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் தங்களைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினர் ஆங்கிலேயர். ஆங்கில ஆட்சி மீதான விசுவாசத்துக்கு அடையாளமாகக் கருதினர். இந்த எதிர்பார்ப்பு விருப்பத்தின் பேரில் நடப்பது போல் தோன்றினும், புத்தாண்டுக்கு அதிகாரியைக் கண்டுகொள்ள வராதோர், கணுக்கணுவாக வஞ்சம் தீர்க்கப்பட்டபோது,  அது கட்டயமாக நிறைவேற்ற வேண்டிய நேர்த்திக் கடனாகிற்று.அதிகார மையத்தின் இந்தப் புள்ளியில் வாழ்த்துத் தெரிவித்து வணங்கும் நேர்த்திக்கடன்தான் இன்று ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முறை .

ஆங்கிலேயரின் இங்கிலாந்திலோ, பிற முதலாளிய நாடுகளிலோ அனைவரும் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து மகிழும் சனநாயக முறை இருக்கிறது. இந்தியாவில் அது ஆங்கில ஆட்சி மீதான விசுவாசத்தின் பக்கமாகக் காணப்பட்டது. வாழ்த்துத் தெரிவிக்கும் நேர்த்திக்கடன்,  இன்றைய அரசமைப்பிலும்,  தனியார்மயம் பெருகியுள்ளதால் அந்த நிர்வாக அமைப்பிலும் தொடருகிறது. இந்தப் பழக்கம் கட்சிஅரசியலிலும் வேரூன்றிவிட்டது. அரசியல்கட்சிகள் என்பனவும் தலைமையின் கட்டளைகளுக்கு உட்பட்ட அதிகாரப்படிநிலையாக இயங்குவது கண்கூடு.

இளைய தலைமுறை,  நடுத்தர வயதுகள் மதுக்கடைகள்,  களியாட்ட அரங்குகள் வழி புத்தாண்டைத் தரிசிப்பார்கள். ஐம்பது ஆண்டுகள் முன் இத்தனை தீவிரமாய் கொண்டாடப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் எடுத்து,  இப்போது வெறியோடு சிறுநகரம் முதல் பெருநகர்வரை , ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் – வாழ்த்துச் சொல்லி! கொண்டாட்டங்களில் அதிக எண்ணிகையில் பங்கேற்போர் இளையோர், மாணவர் ,  குறிப்பாக கொளுத்த வருமானம் பெறுகிற கணிணித் துறையினர், கார்ப்பரேட் நிறுவனப் பணியாளர்கள்.

வணிகச் சந்தையை நோக்கி எல்லோரையும் திரளவைக்கிறது புத்தாண்டு. அன்றைக்குத் தள்ளுபடியில் பொருளை வாங்காவிட்டால் வேறு என்றைக்குமே இல்லை என்ற உளவியல் அவசரத்தை உண்டுபண்ணுகிறது. திரைப்படம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், பக்தி, பஜனை, கோயில் என்று அனைத்தையும் சுற்றி புத்தாண்டு முற்றுகையிடுகிறது. விற்பனைப் பொருட்களின் விளம்பரக் களமாக தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன. புத்தாண்டை நடுநரம்பாக்கி திரைப்படப் பேருருக்கள், பிம்பங்கள் தொலைக்காட்சிகளால் கட்டமைக்கப்படுதல் கண்கூடு. தங்களை விட்டால் லோகத்துக்கு விமோசனமே இல்லை என்ற பாணியில் அறிவுஜீவித் தோரணையில் நடிகர், நடிகையர் புத்தாண்டு போதனையில் இறங்கிவிடுவார்கள்! அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் தலைவர்களின் வாழ்த்துச் செய்தி! மத வழிபாட்டுப் பண்டிகைகளை முன்னிறுத்தி ஆசி வழங்கும் மடாதிபதி, பீடாதிபதி, ஆசாரியார், பகவான்கள், மத குருக்கள் வாரித் தெளிக்கும் அருளாசிகள் ஆங்கிலப் புத்தாண்டுக்கும்! ஆங்கிலப் புத்தாண்டுக்கு நள்ளிரவிலும் திறக்கின்றன நமது கோயில்களும் தேவாலயங்களும்!

இதுபோன்ற பண்டிகை, திருவிழாக்களைக் கேள்விக்குள்ளாக்கிய தொடக்ககாலத் திராவிட இயக்கங்கள் அவைகளின் இடத்தில் சமுதாய சீர்திருத்தப் புதிய மாற்றீடுகளை முன்வைத்துப் பணியாற்றின. பொங்கல் நாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்ற கருத்தாக்கத்தினை பாரதிதாசன்,  நாவலர் பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம்,  ரா.பி. சேதுப்பிள்ளை, இராசமாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள்,  பெரியார் அண்ணா போன்ற சமுதாய சீர்திருத்தத் தலைவர்கள் முன் வைத்தனர். தீபாவளி, கார்த்திகை,  ஆயுதபூஜை,  பிள்ளையார் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு மாற்றாக பொங்கல் திருநாள், உழவர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு என திராவிட இயக்கங்கள் எடுத்துச் சென்றன. மே நாள், அக்டோபர் புரட்சி,  உழவர் திருநாள் என பொதுவுடைமை இயக்கத்தவர்கள் மாற்று விழாக்களில் மக்களை பங்கேற்கச் செய்தனர். இன்று மாற்று விழாக்கள்,  நிகழ்வுகளை ஒப்புக்கு மட்டுமே நிகழ்த்தி, அனைவரும் ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தில் கரைகிறார்கள்.

மேலை நாடுகளின் கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வாழ்வின் பகுதியாக மாறியுள்ளன. பிற திசைகளிலிருந்த, குறிப்பாய் மேலை நாடுகளிலிருந்து வரும் புதியனவற்றை நம் வாழ்வுக்கு உகந்ததாய் ஆக்கிப் பயன்படுத்துகிறோம்.அதுபோல் ஆங்கில ஆண்டு வரிசை, மாதங்கள், வாரங்கள், நாட்கள் என நம் வாழ்வின் நடைமுறையாக ஆகியுள்ளன; இதனை யாருடைதாகவோ நாம் கருதவில்லை. வரலாற்றில் நமக்களிக்கப் பட்ட அறிவியல் கொடை அது. அறிவியலில் விளைந்த இப்புதினத்தைப் பயன்படுத்துவது நம் இயல்பாகியுள்ளது.

-2-

புத்தாண்டு இப்போது வாசலில் நிற்கிறது.

இது என்ன காலம்?

இருண்ட காலத்தின் குறியீடு அல்லவோ ?

செத்தை, சருகு, அழுகல் காய்கறி, கெட்டுப்போன உணவு என அனைத்துக்கழிவுகளும் குவிந்து கிடப்பது குப்பை. சில மாவட்ட மக்களின் வாழக்கையைக் குப்பையாக்கிவிட்டு வெள்ளம் ஓடிவிட்டது. வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. நீர் ஆறாத்தீ புண்களை தந்துள்ளது.வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது.

எல்லா இழப்புகளையும் ஈடுசெய்துவிடலாம். உயிரிழப்புகளை எதைக்கொண்டு ஈடு செய்வது ? பணமோ, பொருளோ எது கொடுத்தும் மீளப்பெற முடியாத 300 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், தூத்துக்குடிநகர் என கண்ணில் ரத்தம் வருகிற மாதிரி மக்கள் வாழ்விடங்கள் தண்ணீா் சூழ்ந்த கல்லறைகளாகின.

இயற்கைப் பேரிடர் என்ற வார்த்தையை ஏற்கத்தான் வேண்டுமா? நில நடுக்கம், கடல் சீற்றம், சுனாமி, காட்டுத்தீ போன்ற அழிவுகள் நேர்கிறபோது இயற்கைப் பேரிடர் என்ற சொல்லால் சுட்டலாம். அவை யாவனவும் இயற்கையின் தவறுகளால் உண்டாகின்றனவா? இயற்கையை மனித இனம் பயன்படுத்துக் கூடாத பேராசைக்குப் பயன்படுத்துவதால் விளைவன இப்பேரழிவுகள்.

“எல் நினோ – என்ற புவிவெப்பத் தாக்கத்தால் பசிபிக்கடலில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை கடும் வெப்பம் நிலவியது. இதனால் சில நாடுகளில் 2015 அக்டோபர் முதல் டிசம்பா் வரை கடும் மழை பெய்தது. இந்த மழை 2016 – துவக்கம் வரை தொடருகிறது. இந்தியாவின் தென்மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்யும். பசிபிக்கடலில் ஏற்பட்டுள்ள கடும்வெப்பத்தால் தான் அக்டோபர் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது………………ஏற்கனவே சென்னை அபரிதமான மழையைப் பார்த்து விட்டது ”

ஐ.நா. வின் சமூகப் பொருளாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. முதலாளித்துவ நாடுகளின் வாகனப்புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு, சுற்றுச்சூழல் மாசு என அடுக்கிக்கொண்டே செல்லலாம் புவி வெப்பமடைதலுக்கான காரணங்களை கண்ணுக்குத் தெரியாத பேரிடரை அழைத்து வந்த வல்லரசியமும் கண்ணெதிரில் செயற்கைப் பேரிடராக மாற்றிய உள்ளூர் ஆட்சியும் தான் நம்வாழ்வுக்குள் வெள்ளத்தை அழைத்து வந்தவர்கள்.

ஆறு, குளம், ஏரிகளின் ஆவிகள் உலவி விட்டுப்போன வீடுகளுக்குள் மக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். வீட்டில் ஈரம் உலர்ந்த போதும், இதயத்தில் அதன் அனல் உலராது தொடா்ந்து கொண்டிருக்கிறது. பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் தன் கையைத் தானே ஊன்றி கரணம் போட்டு எழும் காலத்தின் இறுதிவரை அனல் தகிப்பு நீடிக்கும்.

நம் குடும்பங்களில் ஒரு நேர்த்தியான,  உயரிய பண்பாடு நிலவுகிறது. குடும்பத்தில் சாவு நிகழ்ந்தால் அந்த ஓராண்டு முழுவதும் தீபாவளி, கார்த்திகை,  பொங்கல் போன்ற விழாக்களும் , திருமணம் போன்ற வாழ்வியல் நிகழ்வுகளும் நிகழ்த்தப்படுவதில்லை. துக்கப்பதிவினை தமிழ்ச் சமூகக் குடும்பங்களில் இவ்வாறு எழுதிக்காட்டினார்கள். ஓராண்டுக்கு கொண்டாட்டங்களைப் புறந்தள்ளுவார்கள். வெள்ளக்காடான தமிழ்ச்சமூகத்தின் பிரதேசங்கள் இழவுவீட்டின் காட்சியாகியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னின்ன வகையில் துணை செய்யலாம் எனத் திட்டமிடுவது முதற்கடைமை.கடமை மட்டுமல்ல, மனிதநேய உணர்வின் வெளிப்பாடு.

எல்லாவற்றையும் அடித்துச் சென்ற வெள்ளம் மனித நேயத்தை அடித்துச் செல்லவில்லை. ஊருக்கு நூறு போ் என்ற உன்னதர்கள் அப்போது தெரிந்தார்கள். அந்த உன்னதர்கள் யார் என அடையாளம் காட்டியது வெள்ளம். இவர்கள் நாம் வாக்களித்துத் தேர்வு செய்யாத ,  நமக்காக உயிரையும் பொருட்படுத்தாத பிரதிநிதிகள். இந்தத் தொண்டூழியத்தை புதுப்பித்துக் கொள்ளும் வகையாக , நமக்குள் கிடக்கும் மனிதநேயத்தினை மீட்டெடுக்கும் விதமாக சகலரும் கைகோர்த்து பாதிப்புகுள்ளான பல லட்சம் மக்களை அணைவாகக் கைதூக்கிவிட வேண்டிய காலமிது. சாதி, மதம், குழு, வேண்டியோர் , வேண்டப்படாதோர்  என்னும் பேதம் கடந்து முன்னர் ஆற்றிய ஊழியத்தினும் கூடுதலாக துயர் துடைப்பது கடமை – ஆம், இது கடமை தான். இந்த ஓராண்டாவது புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து துயர் துடைப்புக் கடமையினை மேற்கொள்ள முயல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *