மேலும்

அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன்

R.sampanthanஅரசியல் தீர்வொன்றை அடைவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதனைக் குழப்ப எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது  வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

“யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டதாக அறிகிறேன். ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று வகை நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

1) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு

2) ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படுவது

3) தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சமகாலப் பிரச்சினைகள்

இவை தொடர்பாக இவ்வமைப்பு செயற்படப் போவதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

ஜனநாயக நாடொன்றில் எவரும் ஒன்று கூடுவதற்கும் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதற்கும் பரிமாறிக் கொள்வதற்கும் சுதந்திரமுண்டு. குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கும் உரிமையுண்டு. இது அவர்களுடைய அடிப்படையான ஜனநாயக உரிமை இதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அது தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் ஆணையைப் பெற்றே அவ்வாணையின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி தேர்தலாக இருக்கலாம் மாகாண சபைத் தேர்தலாக இருக்கலாம் அல்லது பொதுத் தேர்தலாகவும் இருக்கலாம் எல்லாத் தேர்தல்களிலும் எல்லாக்காலத்திலும் மக்களுடைய பலமான ஆணையை பெற்றே வந்துள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களாக இருக்கலாம் அல்லது ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நீண்ட காலமாக தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறது.

2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி அதிபர் தேர்தல் முடிவடைந்த காலத்திலிருந்து கூட்டமைப்பின் தலைமை வலியுறுத்தி வருவது மாத்திரமல்ல அதற்காக கடுமையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

எனவே தான் இத்தகையதொரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. எமது மக்களுக்கு சாதகமான முடிவுகளை பெற்று தருவதும் உரிய தீர்வுகளை வென்றெடுப்பதிலும் எமக்குள்ள தார்மீக கடமைகளை நாம் நன்றாக உணர்ந்துள்ளோம் அதை நோக்கியே நாம் நிதானமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது.

இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கும் எங்களுக்குமிடையில் நெருக்கமான தொடர்புகள் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது. அத்தொடர்பானது தொடர்ந்து கொண்டே செல்லும். தற்பொழுது யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதிக்குமா? அல்லது குந்தகத்தை விளைவிக்குமா? என்பதை மிகக் கவனமாக அவதானித்து வருகிறோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்விதமாக அமைய வேண்டும் என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறி வந்துள்ளது. ஒவ்வொரு தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போதும் இது தவிர்ந்த வேறு சந்தர்ப்பங்களிலும் அந்த தீர்வு பற்றி மக்களுக்கு விளக்கியுள்ளது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் மக்கள் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டதன் பேரிலேயே உரிய ஆணையை மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றார்கள். இது பற்றி எவ்வித சந்தேகங்களும் யாரும் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில் நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். அது எழுந்தமைக்கான காரணம் என்னவெனில் இப்பேரவையில் அங்கம் பெறும் பலர் ஜனநாயக ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் பூரண சம்மதத்துடன் நியமிக்கப்பட்டு வெற்றி பெற்று அதன் நிமித்தம் வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவர் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடாமல் வேறு கட்சியில் போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்கவே முடியாது.

விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட முதல் முரண்பாடு சென்ற நாடாளுமன்ற தேர்தலிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை. கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு முதலமைச்சராக பதவியேற்ற அவர் தனது சொந்தக்கட்சிக்கு ஆதரவை நல்கியிருக்க வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமையாகும். ஆனால் விக்னேஸ்வரன் என்ன செய்தார். தான் மௌனமாக இருக்கப் போகின்றேனென்றும் கூறி தனது தார்மீக கடமையிலிருந்து தவறியது மாத்திரமல்ல தனிப்பட்ட முறையில் அவரால் சில அறிக்கைகளும் விடுக்கப்பட்டன.

அவரால் விடுக்கப்பட்ட அறிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சாதகமாக அமைந்ததாக பரவலாக கருதப்பட்டது. அவரால் விடுக்கப்பட்ட அறிக்கைகள் எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது அனைவரும் அறிந்த விடயம் விக்னேஸ்வரனுடைய அறிக்கைகளை கூட்டமைப்புக்கு எதிராக அந்த வேட்பாளர்கள் பயன்படுத்திய போதும் அவர்கள் மக்களால் பூரணமாகவும் முழுமையாகவும் நிராகரிக்கப்பட்டார்கள்.

இத்தகையதொரு சூழ்நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தோற்கடிக்கப்பட்டவர்களையும் ஒரு சில அதிருப்தியாளர்களையும் கொண்டு பேரவை ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் நடைபெறவுள்ள முக்கிய கருமங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் மக்களிடம் பெற்ற ஆணையின் அடிப்படையில் அக்கருமங்களை முன்னெடுத்து செல்ல வேண்டிய ஒரு சூழலில் மக்கள் மத்தியிலும் நாட்டிலும் குழப்பங்களை ஏற்படுத்தி விடும் அபாயமொன்று இப்பேரவையினால் உண்டாகப் போகிறது என்ற கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது (விக்னேஸ்வரன் தவிர்ந்த) மாகாணசபை உறுப்பினர்களோ இப்பேரவையில் இடம் பெறவில்லையென்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்தவொரு விடயத்தையும் ஒழிவு மறைவாகவோ திரை மறைவிலோ செய்ததுமில்லை. செய்யப் போவதுமில்லை. எனவே எமது முயற்சிகளுக்கும் முன்னெடுப்புக்களுக்கும் யாரும் குழப்பம் உண்டாக்காமல் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அரசியல் தீர்வொன்றை நாம் பெறுவதற்கு தமிழ் மக்களுடைய ஆதரவு மாத்திரமல்ல இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகங்களினதும் ஆக்க பூர்வமான ஆதரவையும் நாம் பெற வேண்டும். இதுவொரு முக்கியமான விடயமும் கூட எனவே எமது நோக்கத்தை நிறைவேற்ற நாம் மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குண்டு.

தற்பொழுது மாற்றமடைந்திருக்கும் அரசியல் சூழலில் அரசாங்கம் சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரின் முயற்சியினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகையதொரு காலகட்டத்தில் நாட்டிலும் மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களுடைய நீண்ட கால அபிலாசைகளுக்கும் அடிப்படைக் கோரிக்கைகளுக்கும் ஒரு நியாயமான நிரந்தரமான நிலைத்து நிற்கக் கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வொன்றை அடைவதற்குரிய ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதை இல்லாமல் ஆக்க யாரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

திடீரென இரகசியமாக அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும் பேரவையும் அதில் பங்காளிகளாக அங்கம் பெறும் நபர்களையும் நோக்குமிடத்து அவர்களுடைய அந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் எமக்கு சந்தேகங்களை உருவாக்குகின்றன. இதை எமது மக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

மிக நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் எதிர் நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்கள் எது உண்மையென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய நீண்டகாலப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற எமது இலக்கை நாம் முழுமையாக பெற மிக அவதானமாகவும் அர்ப்பணிப்புடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தேவை எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந் நிலையில் தமிழ் மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எம்மாலான முயற்சிகளை தீர்க்கமாக மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

2 கருத்துகள் “அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன்”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    முன்பு ஆறு வருடங்களாக ஒரு தீர்வுப் பொதி என்று சந்திரிகா ஏமாற்ற ஒரு பிரதியை ரனில் எரியூட்ட சம்பந்தர் கை கட்டி வாய் பொத்தி நின்றார்கள் இன்று மைத்திரி கொண்டு வாற தீர்வு பொதிக்கு இடையில் ஏன் சமந்தா குழு இன்றும் வாய் பொத்தி கை உயர்த்த போகிறார்கள் .வரும் வராது கதைதான்.

  2. மனோ says:

    ‘தற்பொழுது மாற்றமடைந்திருக்கும் அரசியல் சூழலில் அரசாங்கம் சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரின் முயற்சியினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகையதொரு காலகட்டத்தில் நாட்டிலும் மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களுடைய நீண்ட கால அபிலாசைகளுக்கும் அடிப்படைக் கோரிக்கைகளுக்கும் ஒரு நியாயமான நிரந்தரமான நிலைத்து நிற்கக் கூடிய நடைமுறைப் படுத்தக் கூடிய அரசியல் தீர்வொன்றை அடைவதற்குரிய ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதை இல்லாமல் ஆக்க யாரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

    திடீரென இரகசியமாக அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும் பேரவையும் அதில் பங்காளிகளாக அங்கம் பெறும் நபர்களையும் நோக்குமிடத்து அவர்களுடைய அந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் எமக்கு சந்தேகங்களை உருவாக்குகின்றன. இதை எமது மக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.’

    இத்தகைய நியாயமற்ற குற்றச்சாட்டுகளை எதற்காக இவர் எழுப்ப வேண்டும். உத்தேச அரசியல் தீர்வு தமிழருக்கு என்னவாக இருக்கப் போகிறது என்று அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடாது என சம்பந்தன் நினைக்கிறாரா?

    இல்லை தமிழர் சார்பாக அவர் என்ன கேட்கிறார் என்பதை தமிழ் மக்கள் அறிந்துவிடக் கூடாது என நினைக்கிறாரா?

    இதிலே தேர்தலில் தோற்றவர்கள் அவரால் ஓரம் கட்டப் பட்டவர்கள் சம்பந்தப் பட்டுள்ளார்கள் என்ற ஆத்திரம் ஏன் எழ வேண்டும்? ஐயாவின் வரலாறு நல்லவிதமாக பதிவாகும் வகையில் அரசியல் செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பம்.

Leave a Reply to Karthigesu Indran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *