இன்னமும் முடிவுறாத சிறிலங்காவின் ஜனநாயக மாற்றம்
புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Corporation’s (MCC)) இயக்குனர் சபையானது அண்மையில் தனது இறுதிக் காலாண்டுக் கூட்டத்தை நடத்தியிருந்தது.
இதன்போது, இந்தச் சபையானது புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் நிதியை 2016ல் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியான ஐந்து நாடுகளைத் தெரிவுசெய்தது. ஐவரிகோஸ்ட், கொசோவா, செனகல், டோகோ மற்றும் சிறிலங்கா ஆகியனவே இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஐந்து நாடுகளாகும்.
அமெரிக்காவின் அரசியற் கட்சிகளின் பலமான ஆதரவுடன் 2004 ஜனவரியில் அமெரிக்க சட்டசபையால் உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இயங்கும் சுயாதீன அமெரிக்க உதவி நிறுவனம் எனத் தன்னைத் தானே புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனமானது தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு உதவிகளை எவ்வாறு நல்ல கோட்பாடுகள், நாட்டின் உரிமையாண்மை மற்றும் பெறுபேறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிகளுக்காக சிறந்த முறையில் வழங்குவதென்பது தொடர்பாக புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனமானது திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுகாதாரம், நீர், விவசாயம், ஊழல் தடுப்பு, நில உரிமைகள் மற்றும் கல்வி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளை மையப்படுத்தி இக்கூட்டுத்தாபனமானது பணியாற்றி வருகிறது.
சிறிலங்காவின் தற்போதைய நிலைகளை முன்னேற்றுவதற்கு அமெரிக்காவின் சுயாதீன புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனமானது சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. ‘சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி, தனியார் முதலீட்டு வாய்ப்புக்கள் போன்றவற்றில் உள்ள முட்டுக்கட்டைகள் மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான தடைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக வரும் மாதங்களில் சிறிலங்கா அரசாங்கமும் மிலேனியம் கூட்டுத்தாபனமும் இணைந்து ஆராயவுள்ளன.
இந்த மதிப்பீட்டின் பெறுபேறுகளின் உதவியுடன் சிறிலங்காவில் எத்தகைய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான புதிய கோட்பாடு மற்றும் நிறுவக மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்படும். இந்த நிகழ்ச்சி நிரல் அபிவிருத்தியின் தொடர்ச்சியானது இது தொடர்பில் சிறிலங்கா எவ்வளவு தூரம் ஈடுபாட்டைக் காண்பிக்கின்றது மற்றும் சீர்திருத்தங்களை எவ்வளவு தூரம் முன்னெடுத்துச் செல்வதற்கு உடன்படுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது. இதற்கு ஒரு ஆண்டோ அல்லது அதற்கு அப்பாலும் தேவைப்படலாம்’ என நூற்றாண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா 10 மில்லியன் டொலர் தொடக்கம் 50 மில்லியன் டொலருக்கு உட்பட்ட நிதித் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருப்பதாகவும், இந்தநிதி ஒரு முழுமையான ஒத்துழைப்புத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு சிறிலங்காவில் இடம்பெறும் அண்மைய முன்னேற்றங்கள் தொடர்பில் புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனமானது திருப்தியடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ‘சிறிலங்கா தனது ஜனநாயக நிறுவகங்களை மீளவும் பலப்படுத்துதல், நல்லாட்சியை முன்னேற்றுதல், மனித உரிமைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்தல் போன்ற பல்வேறு விடயங்களில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது’ எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் நிதி வழங்கலுக்குத் தகுதியுடையோர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளதானது சிறிலங்கா மேலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும், இதன்மூலம் 2015ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனநாயக நலன்களை மேலும் வலுப்படுத்தவும், நல்லாட்சிக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் ஈடுபாடு, காத்திரமான கோட்பாடு சீர்திருத்தம் போன்றன தொடர்பில் காண்பிக்கப்படும் அக்கறை போன்றவற்றை மதிப்பீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்னேற்றமானது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு ஒரு நல்லதொரு செய்தியாக உள்ளது. ஜனவரியில் சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து ஏற்பட்டுள்ள அமெரிக்க-சிறிலங்கா நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் உதவி அமைந்துள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்காவின் உயர் மட்ட அதிகாரிகள் பலர் சிறிலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் அமெரிக்க-சிறிலங்கா ‘பங்களிப்பு கலந்துரையாடல்’ ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடும் எட்டப்பட்டது.
ஆனாலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென்பது மிகவும் சிக்கலுக்குரிய விடயமாகும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் நாளாந்த வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாதவிடத்து இவ்வாறான நிதித்திட்டங்களில் எவ்வித பயனும் கிடைக்காது என்பதே முக்கியமானதாகும்.
இந்த அடிப்படையில், வடக்கு-கிழக்கு மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் எந்தவொரு கோட்பாடு சார் சீர்திருத்தங்களும் ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறிலங்கா அனைத்துலக சமூகத்திடமிருந்து உதவிகளைத் தொடர்ச்சியாகப் பெறும் அதேவேளையில், சிறிசேனவும் அவரது அரசாங்கமும் முழுமையான நிலையான நிதிச் செயற்பாடுகளை உள்ளடக்கி ஆழமான சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வலுவான பணியை முன்னெடுக்க வேண்டும்.
சிறிலங்காவால் உரிமை கோரப்படும் ‘ஜனநாயக மாற்றம்’ என்பது இன்னமும் முடிவுறாத ஒன்றாகவே காணப்படுகிறது. இது பூரணமாக நிறைவேற்றப்படுவதற்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.
வழிமூலம் – Huffington post
மொழியாக்கம் – நித்தியபாரதி