மேலும்

சீனா தொடர்பாக மைத்திரிக்கு ஜோன் கெரி கூறிய இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

john-kerry-ms (1)சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளிக் காண்பிக்காவிட்டாலும் கூட,  இத்திட்டத்தை குழப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கிற்கு சென்றபோது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் உரையாடியிருந்தார். சிறிசேனவுடனான நீண்ட கலந்துரையாடலை நிறைவு செய்து விட்டு ஜோன் கெரி புறப்பட்ட போது, சிறிசேன முக்கிய கேள்வியொன்றை வினவினார்.

‘நீங்கள் எவ்வாறு சீனா மற்றும் இந்தியாவை சமநிலைப்படுத்தப் போகிறீர்கள்?’ என்பதே சிறிசேனவால் ஜோன் கெரியிடம் எழுப்பப்பட்ட கேள்வி.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சீனாவின் உதவியும் தேவைப்படுவதை சிறிசேன, கெரியிடம் வலியுறுத்தினார்.

சீனாவிடமிருந்தும் உதவிகளைப் பெறுமாறும் அதனை அமெரிக்கா எதிர்க்கவில்லை எனவும், அதேவேளை, இந்தியாவுடனான உறவை சிறிலங்கா சமநிலைப்படுத்த வேண்டும் எனவும் ஜோன் கெரி, சிறிலங்கா அதிபரிடம் எடுத்துரைத்தார்.

சீனாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பச்சை விளக்கை சிறிசேன அரசாங்கம் காண்பித்துள்ளது. இத்திட்டம் இடைநிறுத்தப்பட்ட போது, தனது முகத்தில் சிறிலங்கா அறைந்துள்ளது என்றே சீனா கருதியது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சீன அதிபரால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்க வைக்கப்பட்டதாகவும், சீன அதிபரால் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு திட்டங்களும் இதுவரையில் இடைநிறுத்தப்படவோ அல்லது இரத்துச் செய்யப்படவோ இல்லை எனவும் சீனா அதிருப்தி வெளியிட்டிருந்தது.

சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளிக்காண்பிக்காவிட்டாலும் கூட,  இத்திட்டத்தை குழப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.

ராஜபக்ச அரசாங்கத்தின் கோட்பாடுகள் போன்று மைத்திரி அரசாங்கத்தின் கோட்பாடுகள் தீங்குவிளைவிக்கக் கூடியவை அல்ல என்பதை இந்தியா நன்கு அறிந்துள்ளது. எனினும், இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் சிறிலங்காவின் எதிர்கால அரசாங்கங்கள் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மாற்றியமைத்தால் என்ன நடக்கும் என்பது தொடர்பான அச்சம் இந்திய அரசியல் வட்டாரத்திற்குள் தற்போதும் நிலவுகிறது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது எவ்வளவு முக்கியமானது என்பது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரை ஒன்றை சீனா மேற்கொண்டிருந்தது. அதாவது இத்திட்டத்தை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்திய போது இதனைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் உள்நாட்டு மக்களின் அனுமதியைப் பெறுவதற்காக சீனா ஒரு தொகைப் பணத்தைச் செலவிட்டுள்ளது.

இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக சீனா ‘கரட் மற்றும் குச்சி’ அணுகுமுறையைக் கைக்கொண்டது. அதாவது சீனா தனது இலக்கை அடைந்து கொள்வதற்காக சிறிலங்கா வாழ் மக்களிடம் கொழும்புத் துறைமுகத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாதவிடத்து மேலும் தனது நிதியைப் பயன்படுத்தப் போவதில்லை என அச்சுறுத்தியுள்ளது.

இதுவே சீனாவின் ‘கரட் மற்றும் குச்சி’ அணுகுமுறையாகும்.

‘இந்திய மாக்கடலின் மத்தியில் சிறிலங்கா அமைந்துள்ளதன் காரணமாக அங்கு எவ்வித சிறப்பு முதலீடுகளையும் சீனா மேற்கொள்ளவில்லை. இப்பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏனைய கரையோர நாடுகளைப் போலவே சிறிலங்காவிற்கும் சீனா உதவுகிறது. தற்போது  சீன-சிறிலங்கா ஒத்துழைப்பின் முக்கியத்தும் மீது கவனம் செலுத்தியுள்ளது’ என நவம்பர் 20 அன்று கொழும்பில் வைத்து சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் குறிப்பிட்டிருந்தார்.

சீனத் தூதுவரின் இந்தக் கூற்றானது சிறிலங்கா மீதான சீனாவின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் காண்பிக்கின்றது.

‘சிறிலங்கா கிழக்கு மற்றும் மேற்குச் சந்தைகளை இணைக்கின்ற பட்டுப்பாதைத் திட்டத்தின் கேந்திரமுக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ளதால் இதன் முழுமையான கட்டுப்பாட்டையும் சிறிலங்கா உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என சீனாவின் யுனான் மாகாணத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் பிரதம ஆலோசகர் ஜின் செங்க் குறிப்பிட்டுள்ளார்.

பட்டுப்பாதைத் திட்டத்திற்குள் சிறிலங்கா உள்ளீர்க்கப்படாவிட்டால் இத்திட்டம் முழுஅளவில் வெற்றிபெறமாட்டாது என்பதே ஜின் செங்கின் கருத்தாகும்.

‘நாங்கள் சிறிலங்காவின் அமைவிடம் தொடர்பாக பொறாமைப்படுகிறோம். எமக்குச் சொந்தமாக கடலும் இல்லை. சிறிலங்காவைப் போன்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் எமது நாடும் அமைந்திருக்கவில்லை’ என சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா ஊடகவியலாளர் குழுவிடம் செங்க் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

யுனான் மாகாணமானது தென் கிழக்கு மற்றும் தென்னாசியா நாடுகளுக்கான சீனாவின் நுழைவாயிலாக உள்ளதுடன், சிறிலங்காவுடன் இருதரப்பு வர்த்தக உறவுகளைப் பேணிக் கொள்வதில் சீனா ஆர்வமாக உள்ளதாகவும் செங்க் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பாடல் அதிகரித்துள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வர்த்தகத் தொடர்பாடலை விட கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுநிலையானது ஒரு மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும் பிரதம ஆலோசகர் செங்க் குறிப்பிட்டார்.

‘நாங்கள் ஏற்கனவே சிறிலங்காவின் வர்த்தக அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் வர்த்தக வட்டாரங்களுடனான உறவை வலுப்படுத்தியுள்ளோம்’ எனவும் செங்க் தெரிவித்தார்.

யுனான் மாகாணத்தில் வர்த்தக மற்றும் வியாபாரம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இனிவருங் காலங்களில் பொருளாதார ஒத்துழைப்பையும் சிறிலங்காவிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் செங்க் சுட்டிக்காட்டினார்.

‘யுனான் மாகாணத்தில் விடுதி வர்த்தகம் மற்றும் பெற்றோலியம் போன்ற துறைகளில் சிறிலங்கா நிறுவனங்கள் அதிகம் முதலிட்டுள்ளன. இதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. சிறிலங்காவிலிருந்து சுற்றுப்பயணிகள் யுனானிற்கு வருகை தருவதும் தற்போது அதிகரித்துள்ளது.

அத்துடன் விடுதி மற்றும் உணவக வர்த்தகங்களை சிறிலங்கா நிறுவனங்கள் மேம்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் யுனான் மாகாணத்தில் அதிகம் காணப்படுகின்றன’ என செங்க் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறெனினும், சிறிலங்காவின் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னமும் யுனான் மாகாணத்தின் மிக முக்கிய வர்த்தகச் செயற்பாடுகளுக்குள் தமது முதலீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் செங்க் சுட்டிக்காட்டினார்.

‘யுனான் மாகாணமானது பொருளாதார ரீதியாக அபிவிருத்திகளை எட்டும்போது சிறிலங்கா நிறுவனங்கள் அதிகளவில் இங்கு தம்மை நிலைநிறுத்தும் என நாம் நம்புகிறோம். இது மேலும் மிக முக்கிய வர்த்தக வாய்ப்புக்களில் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்’ எனவும் செங்க் குறிப்பிட்டார்.

யுனான் மாகாணமானது சிறிலங்காவுடன் விவசாயத் திட்டம் தொடர்பாகப் பணியாற்றுவதாகவும் செங்க் தெரிவித்தார். இரு நாட்டு வர்த்தக உறவுகளுக்கும் அப்பால், கலாசாரத் தொடர்புகள் குறிப்பாக பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மிகவும் முக்கியமானது எனவும் இவர் தெரிவித்தார்.

யுனான் மாகாணமானது பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் வர்த்தக உறவுகளைப் பேணிவருகிறது. குறிப்பாக இரசாய ன உற்பத்திகள், இரும்பு அல்லாத உலோகங்கள், சிகரெட்டுக்கள், தேயிலை, இயந்திரம், இலகுகருவி உற்பத்திகள் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு வர்த்தகப் பரிமாற்றத்தில் யுனான ஈடுபட்டு வருகிறது.

2014ல், இந்த மாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 1281459 பில்லியன் யுவான் ஆகும். இதேவேளையில், இதன் வெளியுறவு வர்த்தக செயற்பாடானது 29.622 பில்லியன் டொலராகும்.

மைத்திரி சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து சிறிலங்காவின் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை சீனா தனது நாட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்குவதற்கான முயற்சிகளில் ஆர்வம் காண்பிப்பதுடன், சிறிலங்காவாழ் மக்கள் மத்தியில் தன்னைப் பிரபலப்படுத்தும் பணியையும் சீனா ஆற்றிவருகின்றது.

சீனாவின் இந்த முயற்சிகள் சிறிலங்காவைப் பயன்படுத்தி சீனா தனது நலன்களை அடைந்து கொள்ள முயல்வதையே சுட்டிநிற்கின்றது. தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சீனாவின் துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்வேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

சீனாவின் துறைமுக நகரத் திட்டம் மற்றும் ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ திட்டம் (Voice of America) ஆகிய இரு திட்டங்களுக்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் குரல் என்கின்ற திட்டமானது 1983ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரணவிலவில் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டமானது சிலாபத்தில் பணியாற்றிய கத்தோலிக்க ஆயரின் தலைமையில் பொதுமக்களால் எதிர்க்கப்பட்டது. அப்போதைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் சில இடதுசாரிக் கட்சிகளும் மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கின.

1994 பொதுத்தேர்தலில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா என்பது முக்கிய சுலோகமாகக் காணப்பட்டது. இவை அனைத்தையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரித்தது. ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வொய்ஸ் ஒப் அமெரிக்காவின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருந்த ஐந்து நட்சத்திர விடுதித் திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது.

இந்த முக்கிய திட்டங்களே 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தன. இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவின் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்ததால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவிருந்த அமெரிக்கத் திட்டங்களை இந்தியா எதிர்த்தது.

1994ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது அமெரிக்க ஆதரவுத் திட்டங்கள் இரத்துச்செய்யப்படும் என எல்லோரும் கருதினர். இதனை இலக்காகக் கொண்டு அரசாங்கமானது பேச்சுக்களை நடத்தியபோதும், தன்னால் வழங்கப்படும் உதவிகளை நிறுத்திவிடுவேன் என சிறிலங்காவை அமெரிக்கா எச்சரித்தது.

இதனால் சந்திரிகா அரசாங்கா அமெரிக்க ஆதரவுத் திட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதற்கான அனுமதியை வழங்கியது. இதன்பின்னர், புதுடில்லிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்தது. இதனால் அமெரிக்க ஆதரவுத் திட்டங்களை இந்தியா தொடர்ந்தும் எதிர்க்கவில்லை.

இத்திட்டங்கள் முற்றுமுழுதாக நிறைவடைந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிப் பெருமிதத்துடன் நோக்கியது.

இதேபோன்றே ராஜபக்ச அரசாங்கமும், இடைநிறுத்தப்பட்ட சீனத் துறைமுக நகரத் திட்டம் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை நோக்கிப் பரிகாசம் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *