மேலும்

சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

maithri-samantha (1)சிறிலங்காவிடமிருந்து நல்லிணக்க முயற்சிகளை எதிர்பார்ப்பது போல், வலுவான வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளையும், இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பையும்  அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான பயணத்தின் போது ஐ.நாவுக்கான அமெரிக்கப்  பிரதிநிதி சமந்தா பவர் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்திக் குறிப்பில்  இதுபற்றித்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரம் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த சமந்தா பவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஏற்கனவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ‘வெளியுறவு இராணுவ விற்பனைகள் மற்றும் அனைத்துலக இராணுவக் கற்கைப் பயிற்சித் திட்டம்’ போன்றன வழங்கப்படுகின்ற போதிலும் இவற்றுக்கு அப்பால் மேலும் சிறிலங்காவுடன் இராணுவ சார் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்பதே சமந்தா பவரின் கருத்தாகும்.

சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது இராணுவ உபகரணங்களை விற்பனை செய்தல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றுக்கு அப்பால், தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தின் போது அமெரிக்காவால் சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகள் வழங்கப்பட்டது போன்று, தற்போதும் இந்த இராணுவ உறவுநிலை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா இராணுவப் பயிற்சிகள் மற்றும் இராணுவத் தளபாடங்கள் போன்றவற்றை வழங்க வேண்டிய தேவை எழவில்லை. ஏனெனில் புலிகளுடனான யுத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வெற்றி பெறப்பட்டது.

ஆகவே போர் முடிவடைந்த பின்னர் சாதாரண ஆயுதங்கள் தொடர்ந்தும் அமெரிக்காவால் சிறிலங்காவுக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் இராணுவ சார் உறவுநிலையை சிறிலங்காவுடன் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக சமந்தா பவர் தனது வருகையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கமானது கருத்திற் கொண்டு அதன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தும் அதேவேளையில், சிறிலங்காவுடன் மேலும் உறவினை வலுப்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடனான சந்திப்பின் போது தூதுவர் சமந்தா பவர் தெரிவித்ததாகவும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணையாகச் செயற்படுவதாக சமந்தா பவர், சிறிசேனவிடம் தனது பாராட்டைத் தெரிவித்திருந்த அதேவேளையில், இத்தீர்மானத்தின் ஏனைய பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நம்பகமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பாகப் பதிலளித்தல், அரசியற் கைதிகளை விடுவித்தல், நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்ற முன்னாள் போர் வலயத்தில் வாழும் மக்களால் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், நாட்டில் இயல்பு நிலையை மீளவும் ஏற்படுத்துவதற்கான சிறிலங்காவின் முயற்சிகளுக்குத் தான் எப்போதும் தனது பலமான ஆதரவை வழங்குவேன் எனவும் சமந்தா பவர் தெரிவித்திருந்தார்.

‘மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி போன்றவற்றைக் குழிதோண்டிப் புதைக்காது சிறிலங்கா தனது தேசிய பாதுகாப்புத் தேவைகளைக் கட்டியெழுப்புவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும்’ சிறிசேனவிடம், தூதுவர் பவர் வலியுறுத்தியிருந்தார்.

ஐ.நா அமைதிப் படையின் நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் அதிகளவில் இணைந்து கொள்வதற்கான தனது பலமான ஆதரவையும் பவர் வழங்கியிருந்தார்.

அத்துடன் சிறிலங்காவின் குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் காவற்துறையினரின் பங்களிப்புக்கள் உலகெங்கும் சமாதானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பங்குவகிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பாராட்டைத் தெரிவித்திருப்பதாகவும் தூதுவர் பவர் தனது சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

‘ஜனநாயத்தின் தூண்களை மீள நிறுவுதல், கைதிகளை விடுவித்தல், இடம்பெயர்ந்த மக்களை மீளவும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுதல், கடந்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குதல், மீளிணக்கப்பாட்டிற்கான அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசித்தல்’ போன்ற செயற்பாடுகளில் இதுவரை சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக தனது சந்திப்பின் போது பிரதமர் ரணிலை சமந்தா பவர் பாராட்டியிருந்தார்.

தூதுவர் பவர் மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது பாதுகாப்புத் துறையை சீர்திருத்துதல், அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் பெண்களை நியமித்தல், மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

நல்லெண்ண முயற்சிகளைப் போலவே சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேலும் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா காத்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது தூதுவர் சமந்தா பவர் வலியுறுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *