மேலும்

புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?

tamilsசிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும்.

இவ்வாறு ‘வொசிங்டன் போஸ்ட்’டில், *Nimmi Gowrinathan மற்றும் *Kate Cronin-Furman ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த வியாழனன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் இந்த நிலையை அடைவதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவடைந்த போது, சிறிலங்காவிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது.

இப்போரின் போது சிறிலங்காப் படையினர் பாரியளவிலான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததற்கான ஆதாரங்களை அனைத்துலக வல்லுனர் குழுவால் 2011ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்ததன் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது தனது படையினரால் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்களை விசாரணை செய்வதற்கு உடன்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தல் மூலம் ராஜபக்ச பதவி விலக்கப்பட்ட பின்னரே, சிறிலங்காவில் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தினர் தலையீடு செய்வதற்கான சாத்தியம் உருவானது.

சிறிலங்காவில் அனைத்துலகப் பங்களிப்புடன் கூடிய நீதிப் பொறிமுறையை நிராகரிப்பதற்காக தான் தனது நாட்டில் மனித உரிமைகளை வலுப்படுத்துவதை உறுதி செய்வதாக சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியது. இவர்களைப் பொறுத்தளவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது ஒரு வெற்றியாகும்.

ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கும் அவர்களது வழக்கறிஞர்களுக்கும் சிறிலங்கா மீதான அண்மைய தீர்மானம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையானது ‘நம்பகமான விசாரணைப் பொறிமுறையாக இருக்காது’ என இதன் உள்நாட்டு சிவில் அமைப்புக்களும் அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் நீண்ட காலமாகச் செயற்பட்டுள்ள போதிலும் இது அரசியல் பக்கச்சார்பானதாகவே இருந்துள்ளது. இப்பொறிமுறையானது நீதியை வழங்குவதில் மட்டுப்படுத்தப்பட்ட தகைமையைக் கொண்டிருந்தது.

இவ்வாறான ஒரு பாரம்பரியத்தை உடைத்துக் கொண்டு சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது, அனைத்துலக வல்லுனர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்புதற்கான சட்டத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளதானது நம்பகமான நீதி வழங்கப்படும் என்பதற்கான ஒரு சமிக்கையாக உள்ளது.

ஆனாலும் போரால் பாதிக்கப்பட்ட குறிப்பாக பாலியல் வன்புணர்வின் பின்னரும் தற்போதும் உயிர்வாழ்கின்றவர்களை சிறிலங்கா அரசாங்கமானது எவ்வாறு நடத்தப்போகிறது என்பதிலேயே சிறிலங்காவின் பாரம்பரிய நீதிசார் நடைமுறையில் மாற்றம் ஏற்படும் என்பது நிரூபணமாகும்.

பாலியல் வன்புணர்வு மீறல்கள் தொடர்பில் நீதியை வழங்குவதை உறுதிப்படுத்துவதே உள்நாட்டு மற்றும் அனைத்துலக நீதிப் பொறிமுறைகள் சந்திக்கின்ற மிகப்பாரிய சவால்களாகும்.

பாலியல் வன்புணர்வ மற்றும் பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை நோக்கும் போது இவர்கள் சமூகத்தின் மத்தியில் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும், மீண்டும் மீண்டும் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வலுக்குன்றியவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்கள் மீண்டும் மீண்டும் தாம் சந்தித்த அவலங்களை சாட்சிப்படுத்தும் போது இந்த சம்பவமானது அவர்களால் மீண்டும் நினைவுபடுத்தப்படுவதாகவும் இது அவர்களுக்கு மனப்பாதிப்தை வழங்குவதாகவும் அமையும்.

ஆனாலும் இவ்வாறான மீறல்கள் தொடர்பில் இவர்களுக்கு நீதி வழங்கப்படுமாயின் அது வரவேற்கத்தக்கதாக அமையும். இல்லையேல் இது போன்ற விசாரணைகளில் எவ்வித நலனும் கிட்டாது.

சிறிலங்காவில் இவ்வாறான சவால்கள் மிகவும் சிக்கலானதாக அமையும்.

இவ்வாண்டு எமது ஆய்வுக் குழுவினரால், ‘எப்போதும் பாதிக்கப்பட்டவர்களா? போருக்குப் பின்னான சிறிலங்காவில் வாழும் தமிழ்ப் பெண்கள்’ என்கின்ற அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறிலங்காவின் முன்னாள் போர் வலயங்களில் வாழும் 50 பெண்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பல பத்தாண்டுகளாக சிறிலங்கா அரச படைகளால் துன்புறுத்தப்பட்டு, போரின் இறுதிக்கட்டத்தில் அனைத்துலக சமூகத்தால் கைவிடப்பட்ட தமிழ்ப் பெண்களைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவகங்கள் மீண்டும் மீண்டும் தவறிழைத்துள்ளன என்பதை நாம் கண்டறிந்தோம். அத்துடன் இந்தப் பெண்கள், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற துறைகளிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளமை இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டு, உயிருடன் வாழும் பல பெண்களின் வாழ்வானது பாதிக்கப்பட்டவர்கள் என்கின்ற பெயரிலேயே தொடர்ந்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமக்கான சமூக சேவைகள் மற்றும் வருவாயை அதிகரிக்கும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவற்றைத் தமது பாதிக்கப்பட்ட அடையாளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிப்படையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அடையாளங் காணப்படும் பெண்கள் சமூகத்தில் எவ்வாறான ஆபத்திற்கு உள்ளாகுகின்றனர் என்பதையும் அவர்கள் பெற்றுள்ள நலன்கள் தொடர்பாகவும் நாங்கள் செவ்வி கண்ட பெண்கள் தெரிவித்தனர்.

அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தனக்கு மூன்று கோழிக்குஞ்சுகளை மானியமாக வழங்கியதாகவும் இவற்றை இராணுவத்தினர் பார்த்து விடுவார்களோ என நான் பிறிதொருவரிடம் கவலைப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தனக்கு என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்துவதற்கு அச்சப்படுவதாகவும், எதிர்காலத்தை எதிர்காலத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துவதே பாதுகாப்பானது எனவும் பிறிதொரு பெண்மணி தெரிவித்தார்.

இருப்பினும் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் தாம் சந்தித்த பிரச்சினைகளை வெளிப்படுத்தி தமக்கு நீதி கிடைப்பதற்காக பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கோரி, மிகச் சிறிய கிராம மையங்கள் தொடக்கம் ஜெனீவா வரை பல்வேறு பேரணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இவ்வாறான பேரணிகள் மூலம் தமது பிரச்சினைகளை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளனர். தமக்கு என்ன நடந்தது என்கின்ற உண்மையை உரத்துச் சொல்வதில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வந்துள்ள அதேவேளையில் தாம் தமக்கு நேர்ந்த கதியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்துவதன் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சாட்சியத்தை வழங்குவதில் தாம் பங்களிப்பதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.

இவர்கள் பல்வேறு தரப்பினருக்கு முன்னால் தமது பிரச்சினைகளை மிகவும் நம்பிக்கையுடன் முன்வைத்துள்ளனர். ஆனாலும் தற்போது இவர்கள் இதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். ‘நாங்கள் சந்தித்த பல்வேறு துன்பங்கள் தொடர்பாக பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் இது எவராலும் கருத்திலெடுக்கப்படவில்லை’ என நாம் ஆய்வுக்கு உட்படுத்திய பெண்ணொருவர் தெரிவித்தார்.

தற்போது சிறிலங்கா தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட நாடு கடந்த நீதிப் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் ஒருதடவை வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்கள் இதன் மூலம் வடுக்களையும் பழைய நினைவுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்மூலம் இவர்கள் மேலும் பாதிப்புறுவதற்குமான சாத்தியத்தை வழங்கியுள்ளது.

தற்போதைய நிலைப்பாட்டின் பிரகாரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பான புதிய சட்டமானது போரால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் இவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியும் என்பதற்கான எவ்வித உறுதிப்பாட்டையும் வழங்கவில்லை.

கடந்த காலத்தில் சிறிலங்காவில் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணையகங்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை. குறிப்பாக மொழி சார்ந்த பிரச்சினையாகும். இது மிகவும் சிக்கலான விவகாரமாகும்.

அதாவது சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள். ஆனால் பெரும்பான்மை சமூகமானது இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாடலில் சிக்கலைத் தோற்றுவிக்கிறது.

சாட்சியங்கள் மிகவும் துல்லியமாக மொழிபெயர்க்கப்படாதவிடத்து, புதிய நாடுகடந்த நீதிப் பொறிமுறை என்பது நேர்மையான தீர்வை முன்வைக்கும் என நம்பமுடியாது. இதன்மூலம் நாட்டில் மீளிணக்கப்பாடு ஏற்படுத்தப்பட முடியும் எனவும் நம்பமுடியாது.

தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வித நிறுவகங்களும் முன்வராததால் கடந்த பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்களைப் பொறுத்தளவில் கடந்த வியாழனன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது உயர் ஆபத்தைக் கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது. பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டவர்களைப் பொறுத்தளவில் இது முற்றிலும் உண்மையாகும்.

சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரமானது மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும் என்பதே உண்மையாகும்.

*Nimmi Gowrinathan is a visiting professor at the Colin Powell School at City College and is the director of the Politics of Sexual Violence Initiative. *Kate Cronin-Furman is a human rights lawyer and post-doctoral fellow at Stanford University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *