மேலும்

சிறிலங்கா துறைமுகங்களை கவர்வதில் சீனா விடாப்பிடி

Hambantota harborவரலாற்று ரீதியாக நோக்கில்,  அம்பாந்தோட்டை துறைமுகமானது கிழக்காசிய கடற் செயற்பாடுகள் மற்றும் ஆபிரிக்கா அல்லது மத்திய ஆசியாவிற்கான வர்த்தக சார் கப்பல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையமாகக் காணப்படுகிறது.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Ankit Panda எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் புதிய வசதிகளை நிர்மாணிக்கப்பதற்கான திட்டம் ஒன்றை சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company -CHEC) முன்மொழிந்திருக்கிறது. இந்த நிறுவனமானது சீன அரசிற்குச் சொந்தமான சீன தொடர்பாடல்கள் கட்டுமான நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் புதிய கப்பல் கட்டுமானத் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதுடன் அங்கு ஏற்கனவே உள்ள கப்பல் தரிப்பிடத்தையும் செப்பனிடுவதே CHEC நிறுவனத்தின் பிரதான திட்டமாகும். இத்திட்ட வரைவானது அம்பாந்தோட்டைத் துறைமுகக் கட்டுமானத்தின் மூன்றாம் கட்டத் திட்டமாகும்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணையில் CHEC நிறுவனமும் உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ராஜபக்ச தொடர்ந்தும் சிறிலங்காவின் அதிபராக பதவி வகிப்பதற்காக ஊழல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக CHEC நிறுவனம் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்காக CHEC நிறுவனம் 1.4 பில்லியன் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது. இத்திட்டமானது மைத்திரிபால சிறிசேன இவ்வாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் தொடர்பாக மீளாய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மகிந்த ராஜபக்ச நிதி மோசடிகளில் ஈடுபடுவதற்கு தான் எவ்விதத்திலும் துணைபோகவில்லை எனவும் இது தொடர்பான செய்திகள் ‘உண்மைக்குப் புறம்பானவை எனவும் பொய்யானவை எனவும்’ CHEC நிறுவனம் அறிவித்திருந்தது.

‘இது தொடர்பான சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் தரப்பினர் எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் தவறான புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டாம். சீனா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சிறிலங்காவில் முதலீடு செய்வதற்காக முன்வரும் முதலீட்டாளர்களுக்கு இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்கள் மூலம் பிழையான சமிக்கையை வழங்க வேண்டாம்’ என CHEC நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு எதிராக சிறிலங்காவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் மூன்றாம் கட்டத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூற்று அறிக்கையைத் தயாரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் தற்போது வழங்கியுள்ளதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கப்பல் தரிப்பிடத்தின் செயற்பாடுகளை முகாமை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாக CHEC நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை சிறிலங்கா துறைமுக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைத் தீவின் தென்கரையோரத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டையானது சிறிலங்காவின் மிகமுக்கிய துறைமுக நகரமாகும். வரலாற்று ரீதியாக நோக்கில், இத்துறைமுகமானது கிழக்காசிய கடற் செயற்பாடுகள் மற்றும் ஆபிரிக்கா அல்லது மத்திய ஆசியாவிற்கான வர்த்தக சார் கப்பல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க மையமாகக் காணப்படுகிறது.

ஜனவரி 2008ல் ஆரம்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மாணத்திலும் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இத்துறைமுகத்திற்கு மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்துறைமுகமானது சீனாவின் CHEC மற்றும் சீன அரசிற்குச் சொந்தமான Sinohydro என்கின்ற நிறுவனம் ஆகியவற்றால் நிர்மாணிக்கப்பட்டது.

இத்துறைமுகத்திற்கான மூன்று கட்டத் திட்டங்களும் நிறைவுற்ற பின்னர் தென்னாசியாவின் மிகப் பெரிய துறைமுகமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைந்திருக்கும். இத்துறைமுகமானது 4000 ஏக்கரில், 33 கப்பல்கள் ஒரேநேரத்தில் தரித்து நிற்கக் கூடிய வசதியுடன் அமைக்கப்படுகிறது.

சிறிலங்காவில் சீனாவால் அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டப்படுவதானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு துணைபோவதாக இந்திய ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இது சீனாவின் முத்துமாலை மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என இந்திய விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீனாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் தரித்து நின்றமை தொடர்பில் இந்தியா ஏற்கனவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காவைப் பொறுப்பெடுத்துக் கொண்ட சிறிசேனவின் அரசாங்கமானது சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் சிறிலங்காத் துறைமுகங்களில் தரித்து நிற்பதற்குத் தடைவிதித்துள்ளது.

இதன்மூலம் சிறிசேன அரசாங்கம் இந்தியாவின் நற்பெயரைச் சம்பாதித்துக் கொள்வதற்கு முயன்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *