மேலும்

சீன – அமெரிக்க – இந்திய உறவுகளின் பண்புகள் – ‘தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்றல்’

us-india-chinaஎந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.

தாராள சனநாயகவாத கருத்தியலின் வாழ்க்கைப் போராட்டத்தின் தற்போதைய மைல் கல்லாக, சீன வர்த்தக பொருளாதார ஆக்கிரமிப்புவாதத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மேலைத்தேய நகர்வுகள் இருக்கின்றன.

சீன பொருளாதார வளர்ச்சியை மஞ்சள் பேயாக உலகில் மேலைத்தேய நாடுகளால் சித்திரிக்கப்படுகிறது. தாராள பொருளாதார கோட்பாட்டு மற்றும் கருத்தியல் வாழ்வுக்காக பிராந்தியங்கள் அவ்வப்போது தமது உயிர் உடைமைகள் நாடுகளின் எல்லைகள் என பல்வேறு விடயங்களை பலிகொடுத்துள்ளன.

இந்த பலியெடுப்பு படலம் தற்போது தெற்கு தென்கிழக்காசியாவில் நிலை கொண்டுள்ளதா என இக்கட்டுரை வினவி நிற்கிறது.

16ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதி வரை பிரித்தானிய சாம்ராச்சியம் உலகின் ஐந்தில் ஒருபகுதி சனத்தொகையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.

பாரிய வீதிப்போக்குவரத்துகளை தனது தேவைக்கு ஏற்ப அமைத்து கொண்டது. வர்த்தக நோக்குடன் மட்டுமல்ல இலவசமாக பெறப்பட்ட மூலப்பொருட்களை நகர்த்தும் பொருட்டு தொடருந்துப் பாதைகளையும் வீதிகளையும் பல்வேறு நாடுகளிலும் அமைத்து- சுதந்திரமான கடற்போக்குவரத்து மூலம் தனது கப்பற்படைகளின் ஆதரவுடன் பிரித்தானிய பொருளாதார நலன்களை முன்னேற்றும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இன்று “சீனர்களாகிய நாம் சீன பொருளாதார தேவைகளுக்கேற்ப வளர்ந்து வரும் நாடுகள் மத்தியில் புதிய வீதிகளையும் தொடருந்துப் பாதைகளையும் அமைத்து, எமக்கு தேவையான மூலப்பொருட்களை சமுத்திர வழியாக நகர்த்த முனைவதில் என்ன தவறு இருக்கிறது?” என்பது சீனாவின், அனைத்துலக வர்த்க விரிவாக்கம் சார்ந்த வியாக்கியானங்களில் ஒன்றாக உள்ளது.

இவ்வியாக்கியானத்தை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் அமெரிக்கா, தனது தலைமையினை வலியுறுத்தும் வகையில், “அரசுகளின் கூட்டே இன்றைய உலக நடைமுறை விதிமுறைகளை தீர்மானிக்கும் பிரதான பங்காளிகளாக உள்ளன. அரசுகளே மிகச்சிறந்த வலுமிக்க செயற்பாட்டு திறன்கொண்டஅ திகார மையங்களாக இன்றைய உலகில் உள்ளன. மனிதப்பாதுகாப்பிற்கு முழு பலத்தையும் திரட்டிய வகையில் அரசுகளே முழுக்கவனத்தையும் செலுத்துகின்றன.

பெரும்பாலான உலக அரசுகளின் இன்றைய தலைமையாக ஐக்கிய அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பங்காளிகளும் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனங்களே உள்ளன. உலகின் மோதல்களை தவிர்ப்பதிலும், அவரவர் ஆதிக்க எல்லைகளுக்கு மதிப்பளிப்பதிலும், மனித உரிமையை வழி நடத்துவதற்கும் இந்த தலைமையே திடசங்கற்பம் கொண்டுள்ளது. இருந்த போதிலும் சில அரசுகள் இந்த உலக ஒழுங்கை திசைதிருப்புவனவாக உள்ளன” என்று வியாக்கியானம் செய்கிறது.

அண்மையில் அமெரிக்க பாதுகாப்புகளுக்கு பொறுப்பான பென்ரகன் அறிக்கையில் அதன் ஆரம்பத்திலேயே பூகோள பாதுகாப்பு நிலை மிகவும், எதையும் குறிப்பாக சொல்லிவிட முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் உலக நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற நிலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதுடன் அமெரிக்காவின் ஒப்பீட்டு ரிதியான இராணுவ மேலாதிக்க நிலை தேய்மானம் கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பலகோணங்களில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சவால்கள் உலக வளமையைப்  பேணும் அரசுகள் சார்ந்த செயற்பாட்டாளர்களிடமிருந்தும், பிராந்தியங்களுக்கிடையில் செயற்படக்கூடிய துணை-அரச சார்பு பிரிவுகளிடம் இருந்தும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திடீரென வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரகாரம் கிடைக்கக் கூடிய மேலான வாய்ப்புகளை அழிவு சக்திகள் பயன்படுத்த கூடியதை முகம் கொடுக்க வேண்டிய நிலை இனிவரும் காலங்களில் ஏற்பட உள்ளதாக பென்ரகன் அறிக்கையில் எதிர்வு  கூறப்பட்டுள்ளது.

அதேபோல அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் குறித்த ஒரு அறிக்கையில் அமெரிக்காவின் வருங்கால தலைமைத்துவத்திற்கும் பாதுகாப்பிற்கும் இருக்கும் சவால்கள் குறித்தே பெரும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

1960களில் இருபது பேருடன் இருந்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனைக்குழு இன்று சுமார் 400 பேர் கொண்ட பெரு நிறுவனமாக மாறி உள்ளது.

இது மேலும் பல மடங்காக விரிவடைய கூடிய தேவை உள்ள அதேவேளை, அடுத்து வர இருக்கும் அமெரிக்காவின் தலைவரோ அல்லது தலைவியோ நிர்வாக வல்லமை அதிகமாக கொண்டவராக இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.

அத்துடன், பிரத்தியேகமான உலக பிரச்சினைகள் எழும்பொழுது உடனடியாக தீர்மானங்களை நிறைவேற்றக் கூடிய அல்லது எதிர்கொள்ளக் கூடிய தகமைமிக்கவராக அடுத்த அமெரிக்கத் தலைவர் எதிர்பார்க்கப்படுகிறார்.

அடுத்த அமெரிக்க தலைமைத்துவத்திற்கு இருக்கும் சவால்கள் இலகுவான பாதைகளாக இருக்கும் என்பதை எந்த சிந்தனை குழு அறிக்கையும் எதிர்வு கூறவில்லை.

பதிலாக நடைமுறை பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டி இருப்பதுடன், விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டிய உத்தரவுகளையும் அதிகாரங்களையும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதிலும் அமெரிக்க தலைவரின் சவால்கள் தங்கி உள்ளது.

ஒரு சில ஐரோப்பிய ஆய்வாளர்களின் பார்வையில் தற்போது நடைமுறையில் உள்ள உலக ஒழுங்கு அமெரிக்க வழிகாட்டலின் கீழேயே உள்ளது. இன்னும் பல வருடங்களுக்கு இந்தநிலை தொடரவே வாய்ப்பு உள்ளது.

சீன- ரஷ்ய போட்டி இடையூறு செய்வனவாக தெரிந்தாலும் பூகோள அளவில் விஸ்தீரணம் கொண்ட தாங்கு திறன் கொண்ட நிலைக்கு அவை முன்னிலை வகிக்கவில்லை என்பது அவர்களின் பார்வையாக உள்ளது.

சில வல்லரசுகள் குறிப்பிட்ட பிராந்தியங்களில் வலுக்கொண்ட நிலை இருப்பது ஒட்டுமொத்த சர்வதேச ஒழுங்கை சிதைப்பதாக இருக்காது. சர்வதேச வர்த்தக பொருளாதார நிலை இதற்கு இடமளிக்காது என்பது ஐரோப்பிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.

ரஷ்யா, கிறீமியாவை தன்னோடு இணைத்து கொண்டதும், உக்ரேனில் தனது பிராந்திய அதிகாரத்தை உபயோகிப்பதும், அமெரிக்க சார்பு கொள்கைகள் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.

அதேபோல தென்சீன கடற்பகுதியை  சீன கடற்படையினர் உரிமை கொள்ளும் போக்கில் செயற்படுவதுவும் அங்கே உள்ள தீவுப்பகுதிகளை தமதாக்கி கொள்வதுவும் வான்பரப்பை பாதுகாப்பு வலயமாக குறிப்பிடுவதும் அமெரிக்காவின் தலைமையிலான உலக ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை அமெரிக்க சீன உறவு பூகோள பொருளாதார நகர்வின் மையமாக கருதப்படுகிறது. பல்வேறு உலக அரசியல் சவால்கள் வந்த போதிலும் உடன்படிக்கைகள் பலவற்றிற்கு இருநாடுகளும் கட்டுப்பட்டு உள்ளன. அதேபோல ரஷ்ய – அமெரிக்க உறவும் மத்திய கிழக்கு, மத்திய ஆசிய நிலைப்பாடுகளில் முக்கிய இடம்வகிக்கிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்க இராசதந்திர தலைமைத்துவத்தை பேணும் பொருட்டு பேச்சுவார்த்தைகளுக்குரிய இடம் எப்பொழுதும் அமெரிக்காவால் பேணப்பட்டு வருகிறது.

ஆனால் நேர்மாறான மறைமுக அரசியல் தந்திரத்தில் சீனாவின் வர்த்தக பொருளாதார விஸ்தரிப்பின் செயற்பாட்டை முடக்கும் விதத்தில் முனைந்து நிற்கிறது அமெரிக்கா, என்பது சீன சார்பு ஆய்வாளர்களின் கவனமாக இருக்கிறது.

அமெரிக்காவில் சீனத் தயாரிப்பு பொருட்களுக்கான எதிர் அலைகளை உருவாக்குதல், கடல் சார் புதிய தலையீடுகளை உருவாக்குதல் ஆசியான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை ஆயுதக் குவிப்புக்குள் உள்ளாக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் அஸ்ரன் காட்டர் அவர்கள் கடந்த ஜுன் மாதம் இந்தியாவுடனான பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டம் ஒன்றை உருவாக்க ஒப்புதல் அழித்திருந்தார். அடுத்த பத்து வருட காலத்தில் அமெரிக்க – இந்திய கூட்டு தளபாட அபிவிருத்தி பாதுகாப்பு உபகரண உற்பத்தி மற்றும் யுத்த விமான தொழில்நுட்பம், விமானந்தாங்கி வடிவமைப்பு போன்றவற்றில் இணைந்து செயலாற்றுவதென ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தை சீன – பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் இந்து சமுத்திரப் பிராந்தியம் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக ஆயுதக்குவிப்பு மற்றும் இராணுவத் தளபாட மையமாக மேலைத்தேயம் மாற்றி வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்திய ஆய்வாளர்களோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது சீனா அமைத்து வரும் வர்த்தக கப்பற்தளங்கள் யாவும் தேவை ஏற்படின் இராணுவ உபயோகத்திற்கும் ஏற்றாற்போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறி வருகின்றனர்.

இது சிற்றகொங் துறைமுகம் ஆயினும், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆயினும், கொழும்பு துறைமுகம் ஆயினும், பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகம் ஆயினும்- அனைத்திலும் சீன இராணுவ கலன்கள் நினைத்த மாத்திரத்தில் கொழுவி விளையாடும் தரத்திலேயே உள்ளது என்பது இந்திய இராணுவ உளவு அறிக்கையாகும்

அதேபோல அமெரிக்க சார்பு, ஆசியான் கூட்டு, தென் கிழக்காசிய நாடுகள் யாவும் ஆயுதக் கொள்வனவில் அண்மையில் பெரும் ஆர்வம் காட்டிவருவதாக ஆயுத விற்பனை முகவர் அறிக்கைகள் எடுத்து காட்டுகின்றன.

ஆக ஆசியாவின் கிழக்கிலும் தெற்கிலும் ஆயுதக்குவிப்பும் போட்டியும் இராசதந்திர மட்டத்தில் இப்பொழுது இடம்பெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பென்ரகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதையும் குறிப்பாக கூறிவிட முடியாத நிலையும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயற்பாடு குறித்த அறிக்கையில் விரைவாக அதிகாரம் மிக்க முடிவு எடுக்கக் கூடிய தலைமைத்துவத்தின் தேவையும், தெற்கு தென் கிழக்காசியா குறித்த எதிர் காலத்தை கவலைக்குள் உள்ளாக்குகிறது  என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மேலாதிக்க உலக ஒழுங்கின் அடுத்த கட்ட இராசதந்திர நடவடிக்கைகளில் இன்னமும் மீதமாக இருப்பது, யுத்த நடைமுறை மற்றும் யுத்த ஒழுங்குகள் குறித்த ஒப்பந்தங்களே ஆகும். ஆசியாவில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்றன அணுஅயுத பலம் கொண்ட நாடுகளாகும்.

இவர்கள் மத்தியில் அறிமுகமாகி இருக்கும் “முதலில் நாம் பயன்படுத்துவதில்லை” என்ற ஒப்பந்தம், இதற்கு முன்னோடியாக உள்ளது. தற்போது வலுப்பெற்று வரும் கடல்சார் ஒப்பந்தங்களுக்கான அழுத்தங்களுக்கு அடுத்தபடியாக, யுத்த நடைமுறை ஒப்பந்தங்களின் தேவை உள்ளதை மேலைத்தேய ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது உலக ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் மேலைத்தேய அரசியல் கருத்தியலின் சொந்தப் பாதுகாப்பிற்கான நகர்வுக்கும், அதன் வாழ்விற்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நகர்வில் இந்து சமுத்திரப்பகுதி தற்போது முக்கிய இடம் வகிக்கிறது.

இந்தவகையில் ஏற்கனவே இந்த கட்டுரைகளில் குறிப்பிட்டது போல, அமெரிக்கா முன்பு ஒருகாலத்தில் சோவியத்தை கொள்ளடக்கிக் கொள்ள சீனாவை நாடியது, இன்று சீனாவை கொள்ளடக்கி கொள்ள இந்தியாவை நாடி நிற்கிறது, வருங்கால உலகில் பொருளாதார, அரசியல்,  இராணுவ, இராசதந்திர வலு நிலையை பெற்றுக் கொண்டு விட்ட இந்தியாவை எவ்வாறு அமெரிக்கா கையாளலாம் என்பது முக்கியமான விடயமாகும்.

பிரதமர் மோடி அவர்கள் இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் பலம்மிக்க பாராளுமன்றம் ஒன்றை கொண்டிருக்கவில்லை. அதன் கட்டுப்பாட்டில் பல்வேறு மாநிலங்கள் இருக்கவில்லை.

வெளியுறவு கொள்கையிலும் வர்த்தக உடன்படிக்கைகளிலும் மாநில அரசாங்கங்கள் தலையீடு அதிகமாக இருந்தது. மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தார், அமெரிக்க கம்பனிகளின் வர்த்தக உடன்படிக்கைகளை தன்பக்கம் கொண்டிருந்தார்.

அதேபோல தெற்கிலே தமிழ் நாட்டில் அமெரிக்க கம்பனிகளின் உற்பத்திகள் வளர்ந்த வண்ணம் இருந்தன. செல்வி ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர்கள் குறித்த திடீர் தீர்மானங்களை நிறைவேற்றினார். சிறீலங்கா குறித்த இந்திய மத்திய அரசின் போக்கிற்கு மிகவும் தடைக்கல்லாக இருந்தார்.

அதற்கும் முன்பாக திமுக தமிழகத்தில் தலைமைத்துவம் வகித்த போது கூட பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சிறீலங்கா அரசினால் நடத்தப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதில் தமிழ்நாட்டில் பெரும் மாற்று அபிப்பிராயங்கள் எழுந்தன. இதனால் சிறீலங்கா – இந்திய உறவு கடினப்பாதையை எட்டி இருந்தது.

மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி அவர்கள் வங்களாதேச நாட்டுடன் முறுகல் நிலையில் இருந்தார். தீஸ்ச நதி நீர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு, வங்க அரசுடன் செய்து கொள்ள இருந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார். மேலும் இந்திய வங்க எல்லை குறித்த விவகாரத்தில் மேற்கு வங்க கடும்போக்காளர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டனர். இதனால் இந்திய வங்க உறவு நிலையில் தளம்பல்நிலை இருந்து வந்தது.

அரசு ஒன்றின் நிலையான இருப்பிற்கு அதிகாரமும் அதன் கட்டமைப்பும் அந்த அரசின் இரத்த ஒட்டமாக பார்க்கப்படுகிறது. புறநில மாநிலஅரசுகள் அதிகாரம் கொண்ட  மத்திய அரசின் அரசியல்சட்ட அமைப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை எனின், மத்திய அரசின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இந்திய கொள்கை ஆய்வு மையமான ipcs மத்திய – மாநில மாற்று கருத்துக்களின் பரிமாணங்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை இக்காலப்பகுதியில் வெளியிட்டது. இதில் பல்வேறு கட்டுரையாளர்களும் தத்தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

மாநில அரசுகளிற்கு இந்திய வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரமும் பங்களிப்பும் இருக்க வேண்டும் என ஒரு சிலரும் இந்திய சமஷ்டியை மத்திய அரசே கட்டிக்காக்க வேண்டும், தெற்காசிய நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது, இது பிராந்தியத்தில் தலைமையை உருவாக்குவதற்கு ஏற்றதல்ல என மறு சாராரும் கருத்துரைத்திருந்தனர்.

மேலும் இந்திய நிலைமை குறித்து ஆய்வு செய்யும் மேலைத்தேய ஆய்வாளர்கள் காங்கிரஸ் அரசின் கட்டுக்குள் பல்வேறு மாநிலங்கள் இல்லை என்பதை வெளிப்படையாக கண்டிருந்தனர்.

இத்தகைய நிலையில் தமிழர்களின் தொன்மை குறித்து அன்றைய அமெரிக்க இராசாங்க செயலராக இருந்த கில்லாரி கிளின்ரன் அம்மையார் சென்னையில் பேசியதையும், மேற்கு வங்கத்தில் புதிய அமெரிக்க முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்த பேச்சுகளை நடத்தியதுவும். அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியுடன் அதிக உறவுகளை வகுத்து கொண்ட நிலையையும் காணலாம்.

மோடி அவர்களின் பிரதமர் பதவிக்கான வெற்றியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து பல இந்திய பத்திரிகையாளர்களும் செய்தியாகவும் கட்டுரையாகவும் வெளியிட்டிருந்தனர். இதற்கு மோடி அவர்கள மீதான மேலைத்தேய நாட்டத்திற்கு, வர்த்தக முதலாளித்துவ போக்கும், இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தில் அவர் மீதான வெளியுலக பார்வையும்  மிகவும் சாதகமாக அமைந்திருந்தது.

இங்கே இந்திய மத்திய அரசு அமெரிக்காவுடன் கடுமையான உறவு கொண்டிருந்த காலத்தில் மாநில அரசுகளை தனித்தனியான கையாழும் போக்கை அமெரிக்கத் தரப்பு கடைப்பிடித்ததை காணலாம். இந்தியாவை தனது போக்கிற்கு ஏற்றவகையில் கையாழும் பலம் அமெரிக்காவிடம் ஏற்கனவே உள்ளது என்பதை இது எடுத்து காட்டுகிறது. இன்றுவரை முதலீடுகள் மூலம் இந்தியா  திசைதிருப்பப்பட்டு நகர்த்தப்பட்டு வருவதையும் காணலாம்.

தேர்தலின் பின்பு மோடி அரசாங்கத்தைப் பலம்மிக்க தலைமையாக கொண்ட மத்திய அரசு இந்திய சமஷ்டி அரசியலில் மாநில தேசியவாதம் அயலுறவு கொள்கைகளில் தாக்கங்களை விளைவிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பது மத்திய அரசின் செயற்பாடுகளுக்கு மிகவும் இடையூறாகவும்,  சீண்டுவதாகவும் அமைந்து விடக் கூடிய நிலை இருப்பதை சீர்செய்ய வேண்டிய தேவை இருந்தது.

இதுஅதிகாரம் தொடர்பான விடயமாகும். ஏனெனில் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதும் அதை வளிநடத்துவதும் இந்தியாவை பிரதிநித்துவப்படுத்துவதும் இந்திய பிரதமர் ஒருவரின் முக்கிய பாத்திரம் மட்டுமல்லாது பிரதான அதிகாரங்களிலும் ஒன்றாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் தான் தீர்வு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், அதன் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களும் தமிழ்நாட்டில் பாரிய வெற்றி பெற்றமையானது டெல்லி தலைமைத்துவத்தையும் கொள்கை வகுப்பாளர்களையும் பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது. இலங்கையுடனான உறவில் முட்டுகட்டை இடுவதாக இருந்தது. அத்துடன் தமிழ் நாட்டிலே பாரதீய ஜனதா கட்சி காலூன்ற முடியாத நிலை இருந்தது.

இந்திய நீதித்துறை, அரசியல் சார்புடையதா இல்லையா என்பதற்கு அப்பால் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு ஊழல் விவகாரத்தில் பதவியை விட்டு தூக்கி எறிவதில் மத்திய அரசின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே நீதிமன்ற செயற்பாடு அமைந்திருந்தது. ஏற்கனவே குறிபிடப்பட்டது போல காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவேளை மத்திய அரசிற்கு இரண்டு முக்கிய மாநில அரசுகளால் அயல் நாட்டு உறவு குறித்த விடயங்களில் மிக்கூடிய அழுத்தங்கள் இருந்தன. இதில் ஒன்று தமிழ்நாடு- இரண்டாவது மேற்கு வங்கம்.

தேர்தல் வெற்றிமூலம் பாராளுமன்றத்தில் அதீத பலத்தை பெற்றுக் கொண்ட மோடி அவர்கள் பதவி ஏற்றதும் தீர்மானங்கள் பலவற்றை நிறை வேற்றுவதில் பெரும் சக்தி பெற்றிருப்பதை உணர்ந்து  ஜெயலலிதா அவர்களின் மீது தனது பலப்பிரயோகத்தை காட்டியதாகவே தெரிகிறது.

ஆனால் உலகில் வாழும் தமிழர்கள் செல்வி ஜெயலலிதா அவர்கள் துணிச்சலுடன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மேலும் துணைநிற்பர்.  ஆனால் மோடி அவர்களோ தனது இலங்கைத்தீவுக்கான பயணத்தில் யாழ்ப்பாணத்திற்கும் சென்று அதனை தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் காவலனாக சித்தரித்து வெகுசன பிரச்சாரம் செய்ததையும் தமிழ் நாட்டு செய்திகள் காட்டின.

இங்கே முக்கியமான விடயம் என்னவெனில் எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தகதாகும். இது கொழும்பின் மத்திய புறநில உறவுநிலைக்கு சங்கடத்தை உண்டு பண்ணக் கூடியதாகும்.

சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை.

மறுபுறத்தில் இலங்கைத்தீவில் இரு தேசிய நிர்வாக பகுதிகளாக எதிரும் புதிருமான நிலை காணப்பட்டால் ஒருபகுதி மேலைத்தேய தாராள பொருளாதார போக்கிற்கு அப்பால் சென்று விடக் கூடிய நிலையினை வல்லரசுகள் எதிர்பார்க்கின்றன. இதனாலேயே அமெரிக்கத்தரப்பு இன்னமும் சிறீலங்காவின் திட்டங்களுடன் இணைந்த செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளது.

அதேபோல பிராந்திய நிலையிலும் இரு தேசிய பகுதிகளாக சிறிய தீவான இலங்கை விளங்கும் பொழுது, பிராந்திய பாதுகாப்பிற்கு எதிரான பாரம்பரிய அரச சக்திகளும் குறிப்பாக பாகிஸ்தானிய, சீன அமெரிக்க, ரஷ்ய செல்வாக்கின் அதிகரிப்பு பிராந்திய நிலையில் நீண்டகால பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பது ஒரு பார்வையாக இருக்கிறது.

அதேபோல அரசு அற்ற சக்திகளான இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகிய தனிமங்களுடன் இந்திய சமஷ்டிக்கு எதிராக செயற்படக்கூடிய குழுக்களின்  நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலை உள்ளது.

இவ்விடயங்களை தமிழ்த் தேசிய அலகு எவ்வாறு கையாளப் போகிறது என்பதிலும் இந்த விடயங்கள் குறித்த கையாள்கையை பிராந்திய மற்றம் உலக வல்லரசுகள் நம்பக்கூடிய வகையில் ஏற்றுகொள்ள வைப்பதிலும் தமிழ் தேசிய அலகின் எதிர்காலம் தங்கி உள்ளது.

இன்று நாம் நெருப்பாற்று நீச்சலில் இருந்து தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்று கொள்ள வேண்டிய தேவையையே இது எடுத்துக் காட்டுகிறது.

– லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *